திருநெல்வேலி:கூடன்குளம் அணுமின் நிலையத்திற்கு ரஷ்யாவில் இருந்து வந்த அதிக உயரம் கொண்ட கனரக உதிரி பாகங்கள் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விஸ்வநாதபுரம் விலக்கிலிருந்து கூடங்குளத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதினால் அந்த வழியில் உள்ள லெவிஞ்சிபுரம், கன்னங்குளம், கூட்டப்புளி, ஜெயமாதாபுரம், செட்டிகுளம், ஸ்ரீ ரங்க நாராயணபுரம், பெருமனல் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு கருதி நேற்று காலை 9 மணி முதல் மதியம் மூன்று மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்திருந்தது.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3, 4, 5 மற்றும் 6 அணு உலைகள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் மூன்று மற்றும் நான்காம் அணு உலைகள் சுமார் 39 ஆயிரத்து 747 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வருகிறது. இதன் மின் உற்பத்தி அடுத்த வருடத்திற்குள் தொடங்கும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது 80 சதவீதம் கட்டுமான பணிகள் முடிவடைந்து, அதில் மின் உற்பத்திக்கான உதிரி பாகங்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதேபோல் ஐந்து மற்றும் ஆறாவது அணு உலைகள் சுமார் 49 ஆயிரத்து 621 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் வருகிற 2027 ஆம் ஆண்டிற்குள் மின் உற்பத்தி தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஐந்து மற்றும் ஆறாம் அணு உலைகளிலும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த சில மாதங்களாக ரஷ்யா - உக்ரைன் போர் தீவிரமாக நடைபெற்றதனால் ரஷ்யாவில் இருந்து கூடங்குளம் கட்டுமான பணிகளுக்காக வரவேண்டிய உதிரி பாகங்கள் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் மூன்று மற்றும் நான்காம் அணு உலைகளின் உதிரி பாகங்கள் பொருத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தொடர்ச்சியாக தற்போது ரஷ்யாவில் உள்ள பீட்டர்ஸ் பார்க் துறைமுகத்திலிருந்து மூன்று மற்றும் நான்காம் அணு உலைகளுக்கும் ஐந்து மற்றும் ஆறாம் அணு உலைகளுக்கான உதிரி பாகங்கள் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்தடைந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக கூடங்குளம் கொண்டு வரப்படுகின்றன.