நெல்லை மாவட்டம் நகர் பகுதியில் நேதாஜி போஸ் தினசரி காய்கறி சந்தையில் 300 கடைகள் செயல்பட்டன. இந்த இடத்தில் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீன வணிக வளாகம் கட்டப்படும் என கூறி, அங்கிருந்த கடைகளை காலி செய்ய உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக தகுந்த இடைவெளியைப் பின்பற்றும் வகையில் நேதாஜி போஸ் காய்கறி சந்தையில் உள்ள கடைகளை இரண்டாக பிரித்து, பாதிக்கடைகள் பொருள்காட்சி மைதானத்திற்கும், மீதி கடைகள் நகர் பகுதிக்கும் மாற்றம் செய்யப்பட்டு, தற்காலிக காற்கறி சந்தை அமைக்கப்பட்டு செயல்பட்டுவந்தது.
இதையடுத்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வணிக வளாகம் வருகிறது என கூறி, பொருள்காட்சி மைதானத்தில் செயல்பட்டு வந்த தற்காலிக கடைகளை காலி செய்ய கோரி வியாபாரிகளுக்கு நகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி நேதாஜி போஸ் காய்கறி சந்தை வியாபாரிகள் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரைச் சந்தித்து கடைகள் நடத்த உரிய இடம் வழங்க மனு அளித்தனர். ஆனால் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் கடந்த 4ஆம் தேதி நேதாஜி போஸ் காய்கறி சந்தை வியாபாரிகள் ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் .
இந்நிலையில் தங்களுக்கு அனைத்து கடைகளும் ஒருங்கே அமையும் வகையில் உரிய இடம் ஒதுக்கி தரக்கோரி அங்கு கடை நடத்தும், அழகேசன், இளஞ்செழியன், அந்தோணி, சுரேஷ், ரசூல் அகிய ஐந்து வியாபாரிகள் பெட்ரோல் கேன்களுடன், நகர காய்கறி சந்தைக்குள் சென்று அங்குள்ள 44 – எண் கொண்ட கடையின் உள்ளே அமர்ந்து தீக்குளிப்போம் என போராட்டத்தல் ஈடுபட்டனர்.