திருநெல்வேலி:பெருமாள்புரத்தை சேர்ந்த தேவி, பொதுப்பணித்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மாதம் வெளியூர் சென்றிருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் பல லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பினர். இச்சம்பவம் நடந்த சில நாட்களில், குலவணிகர்புரம் பிபிசி காலனியை சேர்ந்த வழக்கறிஞர் செல்லத்துரை வீட்டில், 67 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த மாநகர காவல்துறையினர், 2 காவல் துணை ஆணையர்கள் தலைமையில் 5 தனிப்படைகளை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.
காட்டிக் கொடுத்த சிசிடிவி:கொள்ளை நடைபெற்ற நாட்களில், மாநகரம் முழுவதும் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை காவல்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்தனர். அதில் விசிக நிர்வாகி ஜெயக்குமார் சந்தேகத்துக்கு இடமான வகையில், உலா வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவரை காவல்துறையினர் கண்காணித்த போது, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது உறுதியானது.
போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஜெயக்குமார் திருநெல்வேலி டவுண் பகுதியில் வசித்து வருவதும், நெல்லை சட்டமன்ற தொகுதி விசிக துணை செயலாளராக இருப்பதும் தெரியவந்தது.
ஜெயக்குமார் சிக்கியது எப்படி?ஜெயக்குமாரை தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்த போது அவர் சென்னையில் இருந்தார். அவரை போலீசார் பின்தொடர்ந்த நிலையில், சென்னையில் இருந்து பேருந்தில் நேற்று முன்தினம் (பிப்.10) நெல்லை வந்துள்ளார். அப்போது அவரை தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.