திருநெல்வேலி:டவுன் வியாபாரிகள் சங்கத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்துகொண்டு, கரோனா பேரிடர் காலத்தில் வணிக நிறுவனங்களில் ஏற்படும் நடைமுறை சிக்கல்கள் குறித்து கேட்டறிந்து ஆலோசனை வழங்கினார்.
வழக்குகளை தள்ளுபடி செய்ய கோரிக்கை
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, “இரண்டு ஆண்டுகளாக கரோனா பேரிடர் காலத்தில் தமிழ்நாடு முழுதும் காவல் துறையினர் மூலம், வணிகர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை முந்தைய அரசு தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.
ஆனால், இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. எனவே பதிவு செய்த வழக்குகள் அனைத்தையும் எந்த நிபந்தனையுமின்றி ரத்து செய்ய தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு
தொடர்ந்து பேசிய அவர், “கரோனா காலத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து கடைகளையும் 9 மணி வரை திறக்க அனுமதியளித்துள்ளதை வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வரவேற்கிறது. ஹோட்டல்கள் உள்ளிட்ட உணவு பண்டங்கள் விற்பனை கடைகளை 10 மணி வரை இயங்க அரசு அனுமதிக்க வேண்டும்.
மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் கடைகளில் 6 மாதம் வாடகை விலக்கு அளிக்கப்படவேண்டும். குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலாத் தளங்களுக்கு அனுமதியளித்து அங்குள்ள கடைகளை திறக்க அரசு வழிவகை செய்ய வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கண்டிக்கிறது. ஒன்றிய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும். இல்லையெனில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வணிகர் சங்கங்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும்” எனத் தெரிவித்தார்.
வணிகர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க கோரிக்கை
மேலும், “கரோனா காலத்தில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க தமிழ்நாடு முழுதும் பல சந்தைகள் பெரிய மைதானங்களுக்கு மாற்றபட்டது. அதனை மீண்டும் பழைய இடங்களுக்கே மாற்ற வேண்டும். கரோனா பேரிடரில் உயிரிழந்த வணிகர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் வழங்குவதாக அரசு அறிவிக்க வேண்டும்.
வணிகர்களையும் முன்கள பணியாளர்களாக அறிவிப்பதாக முதலமைச்சர் வாய்மொழி உத்திரவாதம் வழங்கியுள்ளார். வணிகர் நல வாரியத்தில் வணிகர்களை உறுப்பினராக சேர்ப்பதற்கு கட்டணம் இல்லாமல் அனுமதியளித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
இதையும் படிங்க: மேகேதாட்டு... 'ஜூலை 17' நாள் குறிச்சிட்டாங்க: தீர்மானமும் போட்டுட்டாங்க!