தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லை பட்டதாரி இளைஞர் சாதிவெறிக் கொலை - விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்

murder case in tirunelveli: திருநெல்வேலியில் வேறு சமூகத்தைச் சார்ந்த இளைஞரை முன் விரோதம் காரணமாக வெட்டிய 3 பேரில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

murder case in tirunelveli
திருநெல்வேலியில் வேறு சமூகத்தைச் சார்ந்த இளைஞரைக் கொலை செய்த வழக்கில் இருவர் கைது

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 1, 2024, 6:14 PM IST

Updated : Jan 2, 2024, 12:04 PM IST

திருநெல்வேலி: ஆதிச்சநல்லூர் அருகே புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியனுக்கு முத்து பெருமாள் அஜய்குமார், கண்ணன் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். பாண்டியன் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், அவரது மூத்த மகன் முத்துப் பெருமாள் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று(டிச.31) முத்து பெருமாள் மற்றும் அவரது சகோதரர்கள் அஜய்குமார், கண்ணன் ஆகிய மூன்று பேரும் புத்தாண்டுக்கு புது துணி எடுத்து வருகிறோம் என்று வீட்டில் கூறிவிட்டு திருநெல்வேலிக்கு வந்துள்ளனர். முத்து பெருமாள் தனி பைக்கிலும் கண்ணன் மற்றும் அஜய்குமார் இருவரும் மற்றொரு பைக்கிலும் வந்துள்ளனர்.

திருநெல்வேலி சிவந்திப்பட்டி சாலையில் சென்றபோது, புளியங்குளம் அருகே காரசேரியைச் சேர்ந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த இசக்கி பாண்டி, முத்துகிருஷ்ணன், ஊய்க்காட்டான் ஆகிய மூன்று பேரும் முத்துப்பெருமாளின் பைக்கை வழிமறித்து அவரிடம் தகராறில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

பின்னர், கண்ணிமைக்கும் நேரத்தில் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் முத்து பெருமாளை பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டி உள்ளனர். வெட்டுவதற்கு முன்பு சாதி ரீதியாகத் திட்டியபடி, வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் முத்து பெருமாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். முத்து பெருமாளை வெட்டி சாய்த்து விட்டு, அங்கிருந்து தப்பி ஓடிய மூன்று பேரும் கையில் ரத்தக் கறையுடன் திருநெல்வேலி மாநகரப் பகுதியில் வலம் வந்துள்ளனர்.

இதைக்கண்ட போலீசார் அவர்களை மடக்கிய பிடித்தனர். அதில் இசக்கி பாண்டி, முத்துகிருஷ்ணன் ஆகிய இருவர் மட்டும் பிடிபட்டனர். தப்பி ஓடிய உய்க்காட்டானை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து திருநெல்வேலி பெருமாள் புரம் போலீசார் கொலை மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், தற்போது கொலை செய்யப்பட்ட முத்து பெருமாள் கடந்த ஓராண்டுக்கு முன்பு புளியங்குளம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பணிபுரிந்துள்ளார். அப்போது அங்கு பணிபுரிந்த பெண்ணுடன் நட்பாகப் பழகியதாகக் கூறப்படுகிறது.

தற்போது, அந்த பெண்ணிற்குத் திருமணமான நிலையில், தொடர்ந்து அந்த பெண்ணிடம் முத்து பெருமாள் பழகியதாகவும் நண்பர் என்பதால் பெண்ணின் குடும்பத்தாரும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. அதேசமயம் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சாதி வெறியை மனதில் வைத்துக்கொண்டு முத்து பெருமாள் அப்பெண்ணுடன் பழகுவதைப் பொறுத்துக் கொள்ளாமல் அவர் மீது பகையை வளர்த்துள்ளனர்.

மேலும், முத்து பெருமாள் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி, அதில் தங்கள் ஊர் நிகழ்ச்சிகளைப் பதிவிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதையும் பொறுத்துக் கொள்ள முடியாத இசக்கி பாண்டி உட்பட மூவர் முத்து பெருமாளை தீர்த்துக்கட்டத் திட்டம் தீட்டியுள்ளனர்.

இந்த நிலையில் தான் முத்து பெருமாள் நேற்று(டிச.31) புத்தாண்டு புது துணி வாங்குவதற்காகத் திருநெல்வேலி சென்றுள்ளார். இதை அறிந்த இசக்கி பாண்டி உட்பட மூவர் அவரைப் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். பின்னர் சிவந்திப்பட்டி சாலையில் வைத்து முத்து பெருமாளை வழிமறித்து மூன்று பேரும் தங்கள் திட்டப்படி வெட்டி கொலை செய்துள்ளனர்.

வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைச் சாதி வெறியோடு கொலை செய்துள்ளதாகக் கூறப்படும் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் போலீசார் இந்த கொலை சம்பவத்தை மிக உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.

மேற்கொண்டு அங்குச் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்க போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி முத்து பெருமாள் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் இந்த சம்பவத்திற்கு தனது கண்டனங்களைத் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவரது X சமூக வலைத்தள பக்கத்தில், “தூத்துக்குடி மாவட்டம், புளியங்குளத்தைச் சார்ந்த பொறியியல் பட்டதாரியான முத்துபெருமாள் என்பவரைச் சாதிவெறிக் கும்பல் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்துள்ளது.

புயல், மழை, வெள்ளப் பாதிப்பிலிருந்து இன்னும் அம்மாவட்டங்கள் மீளவில்லை. இத்தகைய பேரிடர் துயரச் சூழலிலும் சாதிவெறியர்கள் இவ்வாறு படுகொலை செய்வது அதிர்ச்சியளிக்கிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடரும் இத்தகு படுகொலைகளைத் தடுத்திட அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன், நேர்மை திறத்துடன் பணியாற்றும் அதிகாரிகளை அப்பகுதிகளில் நியமித்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்." என குறிப்பிட்டு, முதலமைச்சர் ஸ்டாலினை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:திண்டுக்கல்லில் இளைஞரை பெட்ரோல் ஊற்றி எரிந்து கொலை செய்த வழக்கில் இருவர் கைது.. பின்னணி என்ன?

Last Updated : Jan 2, 2024, 12:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details