திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் மகேஷ் கண்ணனை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
நெல்லை டவுன் வாகையடி முக்குப் பகுதியில் நடைபெற்ற பரப்புரையில் பேசிய அவர், "திமுக தீய சக்திகளுக்கு வாக்களித்தால் பிரியாணி கடை மட்டுமல்ல டீக்கடை, பஜ்ஜி கடை என எந்தத் தொழிலும் செய்ய முடியாது.
கச்சத்தீவை தாரைவார்த்தது ஸ்டாலினின் தந்தைதான். தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை சிறையில் தற்போது வாடுவதற்குக் காரணமும் திமுகதான். தமிழ்நாட்டில் நீட் தேர்வு, காவிரிப் பிரச்சினை, மீத்தேன் என அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம் திமுகதான்.
இலங்கை இனப்படுகொலைக்கு காரணம் காங்கிரஸ் கட்சி. விடுதலைப் புலிகளைக் கொல்ல ஆயுதங்கள் வழங்கியது காங்கிரஸ் அரசாங்கம். அதனோடு கூட்டணியில் இருந்தது திமுக. திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டப் பஞ்சாயத்து ரவுடிசம் பெருகிவிடும்" எனக் குற்றஞ்சாட்டினார்.
திருநெல்வேலியில் டிடிவி தினகரன் பரப்புரை தொடர்ந்து பேசிய அவர், "ஆட்சியைவிட்டு போகப்போகிற பழனிசாமி குறித்து பேச ஒன்றுமில்லை. வெற்றி நடைபோடும் தமிழகம் என்கின்றனர். கஜானாவை காலி செய்துவிட்டு ஆறு லட்சம் கோடி ரூபாய் கடனில் தள்ளாடும் தமிழ்நாடாக உள்ளது. பிரதமருக்குத் தமிழ்நாடு மக்கள் மீது அக்கறை இல்லை.
ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட எந்தச் சம்பவத்திற்கும் அனுதாபம் தெரிவிக்கவில்லை. தமிழ்நாடு மீது பிரதமர் அக்கறை காட்டுவதில்லை. திமுகவினர் விஞ்ஞான முறையில் ஊழல் செய்வார்கள். அவர்களையும் அதிமுகவினர் மிஞ்சிவிட்டனர்" என்று விமர்சித்தார்.