கரோனா பெருந்தொற்றின் தீவிர பரவுதலால், ஊரடங்கு மே 3ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது. இதனால், விளிம்புநிலை மக்கள் உணவு பற்றாக்குறையால் தவிக்கின்றனர். அவர்களுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகமும், தன்னார்வலர்களும் உதவிவருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை பகுதியில் 200-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வாழ்ந்துவருகின்றனர். ஊரடங்கினால் முடங்கிய தொழிலினால், உணவின்றி பசியால் வாடினர். இதையடுத்து, அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் 21 நாள்கள் ஊரடங்கு நாள்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டன.
அந்தச் சமயத்தில், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால், அத்தியாவசிய பொருள்கள் மீண்டும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் உறுதியளித்தது.