தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இன்று மாலை நெல்லை - திருச்செந்தூர் வழியே ரயில் இயக்கப்படுமா? - பொறியாளர் குழு ஆய்வு!

Tirunelveli to Tiruchendur route: திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே நடந்த சோதனை ஓட்டத்தின்போது, ரயில்வே பாதை சேதமடைந்த இடத்தில் மட்டும் இன்ஜினை மெதுவாக இயக்கி பொறியாளர் குழுவினர் ஆய்வு செய்தனர்.

சேதமடைந்த இடத்தில் மட்டும் மெதுவாக சென்ற ரயில்
திருநெல்வேலி திருச்செந்தூர் இடையே சோதனை ஓட்டம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 6, 2024, 2:23 PM IST

திருநெல்வேலி:திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே நடந்த சோதனை ஓட்டத்தில் இன்ஜினை 110 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி பொறியாளர் குழுவினர் சோதனை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து பொறியாளர் குழுவினர் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், இன்று மாலையே செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்களில் பெய்த அதி கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த டிசம்பர் 17ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே தாதன்குளம் பகுதியில், ரயில்வே பாதை முழுவதுமாக அரிக்கப்பட்டு சேதம் அடைந்தது.

இதனால் திருச்செந்தூரில் இருந்து வந்த செந்தூர் விரைவு ரயில், திருவைகுண்டத்தில் நிறுத்தப்பட்டது. அங்கும் ரயில் நிலையத்தில் தண்ணீர் சூழ்ந்ததால், ரயிலில் வந்த சுமார் 800 பயணிகள் வெளியேற முடியாமல் தவித்தனர். பின்னர் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனிடையே பெரும் மழை வெள்ளம் காரணமாக தாதன்குளம், திருவைகுண்டம், செம்பூர், ஆறுமுகநேரி ஆகிய இடங்களில் ரயில்வே பாதை சேதம் அடைந்தது.

இதையும் படிங்க: நெல்லை - திருச்செந்தூர் வழித்தடத்தில் ரயில் சோதனை ஓட்டம் தொடங்கியது!

இதனால் திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டு, கடந்த டிசம்பர் 20ஆம் தேதி முதல் ரயில் பாதை சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தது. 17 நாட்களாக நடைபெற்று வந்த சீரமைப்புப் பணி நிறைவடைந்த நிலையில், இன்று திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே தென்னக ரயில்வே தலைமைப் பொறியாளர் பென்னிக் தலைமையில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இருந்து இன்ஜின் மட்டும் சோதனை ஓட்டத்திற்காக பயன்படுத்தப்பட்டது.

இந்த சோதனை ஓட்டத்தில், இன்ஜினை சுமார் 110 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி சோதனை நடத்தப்பட்டது. மேலும், ரயில்வே பாதை சேதமடைந்த இடத்தில் மட்டும் ரயில் இன்ஜினை மெதுவாக இயக்கி பொறியாளர் குழுவினர் ஆய்வு செய்தனர். அதே போன்று, மறுமார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலிக்கும் சோதனை ஓட்டம் நடக்க உள்ளது. இதையடுத்து சோதனை ஓட்டம் நிறைவடைந்து பொறியாளர் குழுவினர் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், இன்று மாலையே ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவில் இருந்து வங்கதேசம் சென்ற ரயிலில் தீ.. 4 பேர் பலி; பலர் காயம்!

ABOUT THE AUTHOR

...view details