தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாநில கல்விக்கொள்கையில் திருநங்கைகளுக்கு முன்னுரிமை; ஓய்வுபெற்ற நீதிபதி தகவல் - ஓய்வுபெற்ற நீதிபதி தகவல்

திருநெல்வேலியில் நடைபெற்ற மாநில கல்விக் கொள்கையை வகுப்பது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டத்தில் மாநில கல்வி கொள்கையில் திருநங்கைகளுக்கு முன்னுரிமை அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மாநில கல்வி கொள்கையில் திருநங்கைகளுக்கு முன்னுரிமை; ஓய்வுபெற்ற நீதிபதி தகவல்
மாநில கல்வி கொள்கையில் திருநங்கைகளுக்கு முன்னுரிமை; ஓய்வுபெற்ற நீதிபதி தகவல்

By

Published : Sep 21, 2022, 10:18 AM IST

திருநெல்வேலி: மாநில கல்விக் கொள்கையை வகுப்பது தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி முருகேசன் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு தனது முதலாவது கூட்டத்தை நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தியது.

இதில் நெல்லை மண்டலத்துக்குட்பட்ட நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வியில் புதிய வழிமுறைகளை அமைக்க வேண்டும், மாணவர்களுக்கான கல்வி கற்கும் திறனை ஊக்குவிக்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும், உயர் கல்வி மற்றும் பள்ளிக்கல்வி துறையில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள், மாணவர்களின் ஒழுக்கமுறை குறித்து கேட்டு அறியப்பட்டது.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் கூறுகையில்,’’ மாற்றுத்திறனாளிகள் கல்வி கற்கும் முறை சீரமைப்பது தொடர்பான கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளது. அதுபோன்று திருநங்கைகளுக்கும் கல்வியில் முன்னுரிமை அளிக்க என்ன செய்யவேண்டும் எனவும் கேட்டறியப்பட்டது.

மாநில கல்வி கொள்கையில் திருநங்கைகளுக்கு முன்னுரிமை; ஓய்வுபெற்ற நீதிபதி தகவல்

நெல்லை மண்டலத்தில் முதல் கூட்டம் நடத்தியுள்ளோம், இன்னும் 7 மண்டலங்களில் கருத்துகேட்பு கேட்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது. கல்வி அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்பது தான் அனைவரின் கருத்தாக உள்ளது. அனைத்து தரப்பினரின் கருத்துக்களும் கேட்கப்பட்டு அறிக்கை அரசுக்கு சமர்பிக்கப்படும். பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அறிவிப்பு வெளியிட்டு தான் கருத்துகேட்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல் கூட்டத்தில் மாணவர்கள் குறைவாக கலந்து கொண்டுள்ளதை கருத்தில் கொண்டு, வரும் நாட்களில் நடைபெறும் கூட்டங்களில் மாணவர்கள் அதிக அளவில் வரவழைக்கப்பட்டு கருத்துக்களை கேட்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலக் கல்விக் கொள்கை 20 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் என்பதால் அவசரப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்படாது. முழு அளவில் ஆய்வுகள் செய்யப்பட்டு அறிக்கை அரசுக்கு அளிக்கப்படும்.

மாநில கல்விக் கொள்கை உயர் மட்ட குழு உறுப்பினர்கள் பள்ளிகளிலும் ஆய்வு மேற்கொள்கிறார்கள். அதன் அறிக்கையும் இதில் எடுத்துக் கொள்ளப்படும். அரசு கொடுத்துள்ள கால அவகாசத்திற்கு முன்னதாகவே தாங்கள் அறிக்கையை சமர்ப்பிக்க முயற்சி எடுத்து வருகிறோம். தற்போதைய காலகட்டத்தில் பள்ளி மாணவர்களிடையே ஒழுக்கம் குறைந்து வருவதற்கு பெற்றோர்களின் கண்காணிப்பு, கண்டிப்பு இல்லாதது மேலும் பாடசுமை அதிகரிப்பு காரணமாகும்.

மாணவர்களை நல்வழிப்படுத்த ஆசிரியர்களுக்கு சிறப்பான திறன் பயிற்சி அளிக்க வேண்டும். ஆசிரியர்களின் படிப்பை வலுப்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும். தனியார் பள்ளி கல்வி தரம் உயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது, தனியார் பள்ளிகளில் மாணவர்களை படிக்க மட்டுமே சொல்லிக்கொடுக்கிறார்கள் அதுவே காரணம்.

கடந்த ஆண்டுகளை விட அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுபள்ளியின் தரம் உயர்த்த குழு பரிந்துரைக்கும். மாநிலம் முழுவதும் பல்வேறு காரணங்களால் படிப்பை பாதியில் நிறுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனையும் ஆய்வு செய்து அதனை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் குழு பரிந்துரைக்கும்.

தேசிய கல்விக் கொள்கையை மாநில கல்விக் கொள்கையுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. தேசிய கல்விக் கொள்கையில் நல்ல சரத்துக்கள் இருந்தால் அதுவும் எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: 2,50,000 புத்தகங்கள்.... மதுரையில் பிரமாண்டமாக தயாராகும் கலைஞர் நூலகம்..

ABOUT THE AUTHOR

...view details