திருநெல்வேலி:நெல்லை - திருச்செந்தூர் வழித்தடத்தில் சீரமைப்பு பணிகள் முடிவு பெற்ற நிலையில், மீண்டும் நெல்லை - திருச்செந்தூர் வழித்தடத்தில் ரயில் சேவையைத் தொடங்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, இன்று (ஜன.6) சோதனை ஓட்டம் நடத்த அதிகாரிகள் திட்டமிட்டு, ஏசி பெட்டிக்கான ரயில் இன்ஜின் நெல்லை ரயில் நிலையத்திலிருந்து திருச்செந்தூர் வரை சோதனை ஓட்டமாக இயக்கப்படுகிறது.
இதில், தொழில்நுட்ப அதிகாரிகள் பயணிக்கின்றனர். அவர்கள் மழையால் சேதம் அடைந்த பகுதிகளில் தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்ட நிலையில், அங்கே ரயிலை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பது குறித்தும், சீரமைப்பு பணிகள் முழுமை பெற்றுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்கின்றனர்.
சோதனை ஓட்டத்துக்குப் பிறகு, அதிகாரிகள் ரயிலை இயக்குவதற்கு அனுமதி அளித்தால், இன்று இரவே திருச்செந்தூர் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது திருச்செந்தூர் - சென்னை எக்ஸ்பிரஸ் நெல்லை ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி போன்ற மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் மிகக் கனமழை தொடர்ச்சியாக பெய்தது. இதன் காரணமாக, தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத பெருவெள்ளம் ஏற்பட்டு, மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 92 சென்டி மீட்டர் மழை பதிவானது. தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது. நீர்நிலைகளிலிருந்து வெளியேறிய தண்ணீர் மற்றும் மழை நீர் என எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.
இது போன்ற சூழ்நிலையில், திருச்செந்தூர் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி மாலை வழக்கம் போல் திருச்செந்தூரிலிருந்து புறப்பட்டது. பலத்த மழைக்கு இடையே ரயில் புறப்பட்ட நிலையில், திருச்செந்தூரிலிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீ வைகுண்டம் ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தடைந்தபோது ரயில் இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.
ரயில் தண்டவாளத்தைச் சுற்றி தண்ணீர் சூழ்ந்து கொண்டதாலும், மோசமான வானிலை காரணமாகவும் ரயிலை இயக்க முடியாமல் அங்கேயே நிறுத்தி வைத்தனர். தொடர்ந்து மழை நீடித்ததால், ரயில்வே நிலையத்தைச் சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்து கொண்டதாலும், ரயிலிலிருந்த சுமார் 800 பயணிகள் வெளியேற முடியாமல் ரயிலுக்குள்ளேயே இரண்டு நாட்கள் பரிதவித்தனர். கடும் போராட்டத்திற்கு இடையே மீட்புக் குழுவினர், அவர்களை பாதுகாப்பாக மீட்டு காப்பாற்றினர்.
இதற்கிடையில் பலத்த மழை காரணமாக, நெல்லை - திருச்செந்தூர் ரயில் வழித்தடத்தில் ஆழ்வார்திருநகரி, செய்துங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களில் ரயில் தண்டவாளங்கள் அடியில் மண் அரிப்பு ஏற்பட்டு வழித்தடம் பாதிக்கப்பட்டது. தண்டவாளங்களும் வழித்தடத்திலிருந்து விலகின.
இதையடுத்து நெல்லை - திருச்செந்தூர் வழித்தடத்தில் கடந்த 20 நாட்களாக ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு, மழையால் சேதம் அடைந்த தண்டவாளங்களைச் சீரமைக்கும் பணிகள் முழுவீச்சாக நடைபெற்றன. குறிப்பாக செய்துங்கநல்லூர், ஆழ்வார்திருநகரி பகுதிகளில் தண்டவாளங்களுக்கு அடியில் மண் சரிவு ஏற்பட்ட நிலையில், அங்கு புதிதாக மண் மற்றும் கற்கள் கொட்டப்பட்டு, தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மாமூல் கேட்டு தொழிலதிபருக்கு மிரட்டல்.. வெடிகுண்டு தவறி விழுந்து வெடித்ததில் 3 பேர் காயம்!