தென்காசி:தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கியமான சுற்றுலாத் தலமான குற்றாலத்தில், தென்மேற்குப் பருவமழைத் தொடங்கியதுமே சீசன் தொடங்கிவிடும். ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களில் குற்றாலத்தில் சீசன் களைகட்டும். இந்த மூன்று மாதங்களில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்திற்கு வருகை தருவார்கள்.
இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பெரிய அளவில் மழை பொழியவில்லை. ஆனால், ஜூலை மாதம் தொடங்கியதும் பரவலாக மழை பெய்யத்தொடங்கிவிட்டது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக கனமழை பெய்ததால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர், கடந்த இரண்டு நாட்களாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தது. இதையடுத்து, கடந்த 8ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.
இதைத் தொடர்ந்து தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குற்றால அருவிகளில் குவிந்து வருகின்றனர். குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலி அருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். சாரல் மழையும், லேசான வெயிலும், இதமான காற்றும் வீசுவதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்தில் தங்கி இந்த இதமான சூழலை அனுபவித்து மகிழ்கின்றனர்.