தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.50,000 லஞ்சம் கொடுத்த போலீசார்? - பல் பிடுங்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர் பகீர் பேட்டி! - Nellai news

ஐம்பதாயிரம் ரூபாய் பணம் கொடுத்து பல் பிடுங்கிய விவகாரத்தை வெளியே சொல்லக் கூடாது என மிரட்டியதால்தான் பிறழ் சாட்சியாக மாறியதாக பாதிக்கப்பட்ட சூர்யா கூறியுள்ளார்.

ரூ.50,000 லஞ்சம் கொடுத்த போலீசார்? - பல் பிடுங்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர் பகீர் பேட்டி!
ரூ.50,000 லஞ்சம் கொடுத்த போலீசார்? - பல் பிடுங்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர் பகீர் பேட்டி!

By

Published : Apr 19, 2023, 3:43 PM IST

பாதிக்கப்பட்ட சூர்யா அளித்த பேட்டி

திருநெல்வேலி:ஜமீன் சிங்கம்பட்டியைச் சேர்ந்தவர், சூர்யா. இவர் தனியார் பள்ளி ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், சூர்யாவை சிசிடிவி கேமராக்களை உடைத்த வழக்கில் கல்லிடைக்குறிச்சி காவல் துறையினர் கடந்த மாதம் கைது செய்துள்ளனர். அப்போது, அம்பாசமுத்திரம் சரக காவல் உதவி கண்காணிப்பாளராக இருந்த பல்வீர் சிங், சூர்யாவின் பல்லை கட்டிங் பிளேடு கொண்டு பிடுங்கி எடுத்ததாக சூர்யா புகார் அளித்தார்.

அதேபோல் மேலும் பாதிக்கப்பட்ட பலர், ஏஎஸ்பி மீது புகார் அளித்த நிலையில், சேரன்மகாதேவி சார் ஆட்சியர், இது குறித்து விசாரணை மேற்கொண்டார். ஆனால், விசாரணையின்போது ஆஜரான சூர்யா, யாரும் தன் பல்லை பிடுங்கவில்லை என்றும், கீழே விழுந்துதான் பல் விழுந்ததாகவும் கூறியுள்ளார். ஆனால், காவல் துறையினரின் மிரட்டல் காரணமாகவே சூர்யா பிறழ் சாட்சியாக மாறியதாகக் கூறப்பட்டது.

இதனிடையே பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில், மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா நடத்தி வரும் உயர்மட்ட விசாரணையில் சூர்யாவின் தாத்தா பூதபாண்டியன் ஆஜராகி, தனது பேரன் சூர்யாவை காணவில்லை என தகவல் தெரிவித்திருந்தார். மேலும் சிறப்பு விசாரணை அதிகாரி அமுதாவிடம் வீடியோ கால் மூலமாக சூர்யா வாக்குமூலம் அளித்துள்ளார்.

நேற்று முன்தினம் சூர்யாவின் தாத்தா பூதப்பாண்டி விசாரணை அதிகாரியிடம் தனது பேரனைக் காணவில்லை என்றும், காவல் துறை தொடர்ந்து மிரட்டி வருவதாகவும், சுமார் 45 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து காவல் துறைக்கு ஆதரவாக தகவல் சொல்லச் சொல்லியதாகவும் விசாரணை அதிகாரியிடம் புகார் அளித்திருந்தார்.

அதன் அடிப்படையில் விசாரணை அதிகாரி அமுதா, வீடியோ கால் மூலமாக சூர்யாவிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்றிருப்பதாகவும், கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் வைத்து தனது பல் பிடுங்கப்பட்டது குறித்து வீடியோ கால் மூலமாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். அதேபோல் சிறப்பு விசாரணை அதிகாரி அமுதா ஐஏஎஸ் உத்தரவின் பேரில், அம்பாசமுத்திரம் வட்டாட்சியரிடம் சூர்யா நேரடியாக வீட்டில் வைத்தும் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அதில் காவல் துறையால், தான் பாதிக்கப்பட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். அதேநேரம், தன் மீது மேற்கொண்டு வழக்குப் பதிவு செய்வதாக காவல் துறையினர் மிரட்டியதாலேயே, தான் பிறழ் சாட்சியாக மாறியதாகவும் சூர்யா தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சூர்யா, “போதையில் தெரியாமல் கேமராக்களை உடைத்து விட்டேன். அதற்காக என்னை காவல் நிலையம் அழைத்துச் சென்று, ஏஎஸ்பி பல்வீர் சிங் பல்லை பிடுங்கி விட்டார்.

பின்னர் ஒரு மணி நேரத்தில், கேமராவுக்கு 45 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும், இல்லாவிட்டால் மீண்டும் வந்து பல்லை உடைப்பேன் என்றும் இந்தியில் தெரிவித்தார். பின்னர், எனது குடும்பத்தினர் பணத்தை செலுத்திய பிறகு என்னை வெளியே விட்டனர். பிரச்னை வெளியே தெரிந்த பிறகு, எனக்கு 50 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொடுத்து, பல் பிடுங்கிய விவகாரத்தை வெளியே கூறக் கூடாது என்று மிரட்டினார்கள்.

ஆய்வாளர் ராஜேஸ்வரி என்னை விடுதியில் தங்க வைத்து, சார் ஆட்சியர் விசாரணையின்போது கீழே விழுந்து பல் உடைந்ததாகக் கூறும்படி தெரிவித்தார். அதனால்தான் நான் பிறழ் சாட்சியாக மாறினேன்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஏஎஸ்பி சார் மீது மட்டும் வழக்கு போட்ருக்காங்க.... தான் பாதிக்கப்பட்டிருப்பினும் அதிகாரிக்கு மரியாதை கொடுத்த இளைஞர்

ABOUT THE AUTHOR

...view details