திருநெல்வேலி: அடர்ந்த வனத்தில் ஆதரவில்லாமல் தவிக்கும் மூதாட்டியின் ஓய்வூதியத்தை கொடுக்க மாதம்தோறும் 30 கிலோ மீட்டர் தூரம் சவாலான மலை பயணம் மேற்கொள்ளும் தபால் ஊழியர் குறித்து இத்தொகுப்பில் காணலாம்.
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் அடுத்த காரையாறு அணைப் பகுதியை சுற்றி மேற்குத் தொடர்ச்சி மலையில் ஆங்காங்கே காணி இனத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் தேவைக்காகவும், அங்குள்ள அரசு அலுவலகம் சார்ந்த விஷயங்களுக்காகவும் இப்பகுதியில் பாபநாசம் கிளை தபால் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு காணி இனத்தைச் சேர்ந்த கிறிஸ்துராஜா (55) என்பவர் தபால் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
தினந்தோறும் வழக்கமான தபால்களை பிரித்துப் பார்க்கும் கிறிஸ்துராஜாவுக்கு அன்று இஞ்சிக்குழிக்கு அனுப்ப வேண்டிய ஒரு மணியார்டர் வந்திருந்தது. காரையார் அணையில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில்; மலைப்பகுதியில் உள்ள இஞ்சிக்குழி பகுதியில் வசித்து வரும் குட்டியம்மாள் என்ற மூதாட்டியின் பென்சன் தொகைக்கான 1,000 ரூபாய் மணியார்டர்தான் அது.
பொதுவாக தமிழ்நாட்டில் 50 வயதை கடந்த பெண்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மாத ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், குட்டியம்மாள் தனக்கான மாத ஓய்வூதியத்தை பெற பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. 100 வயதை கடந்த குட்டியம்மாள் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இஞ்சிக்குழி வனப்பகுதியில் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் இருந்தாலும், அவர்களின் ஆதரவு இல்லாமல் குடில் வீட்டில் தனியாக வசிக்கிறார்.
மலைப் பயணம் மேற்கொள்வதில் மிகுந்த ஆர்வமுடைய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, சில மாதங்களுக்கு முன்பு இஞ்சிக்குழி பகுதிக்கு சென்றிருந்தார். அரசாங்க அதிகாரி அங்கு வந்திருப்பதை அறிந்த மூதாட்டி குட்டியம்மாள், மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவிடம் சென்று தனக்கு உதவுமாறு கேட்டுள்ளார்.
குட்டியம்மாளின் வேதனையை உணர்ந்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, அரசின் மாத ஓய்வூதியம் 1,000 ரூபாய் விரைவாக கிடைக்க வழிவகை செய்தார். அந்த மணியார்டர்தான் கிறிஸ்துராஜாவின் கையில் கிடைத்தது.
இஞ்சிக்குழி செல்வதில் சிரமம் இருந்தாலும், குட்டியம்மாளுக்காக மாதம்தோறும் மலை ஏற கிறிஸ்துராஜா கொஞ்சம் கூட யோசிக்கவில்லை. தானும் ஒரு காணி இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் சவாலான மலை பயணத்தை மேற்கொண்டு மாதம்தோறும் குட்டியம்மாளுக்கு பென்சன் தொகையை கொண்டு செல்கிறார். இதற்காக அவர் ஒரு நாள் முழுவதும் செலவிட வேண்டியுள்ளது.
எனவே அலுவலக வேலை நாட்களில் செல்ல முடியாது என்பதால் ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் தனது பயணத்தை திட்டமிடுகிறார். வனத்துறை அதிகாரிகளும் கிறிஸ்துராஜாவுக்கு உதவியாக அவர் காரையார் அணையை கடந்து செல்ல படகு உதவி செய்கின்றனர். ஆனால், படகுக்கான டீசல் செலவை கிறிஸ்துராஜா தன் சொந்த பணத்தில் மேற்கொள்கிறார். 1,000 ரூபாய் மணியார்டரை கொடுக்க மாதம்தோறும் கிட்டத்தட்ட 500 ரூபாய் செலவு செய்கிறார் கிறிஸ்துராஜா.