திருநெல்வேலி:நெல்லை டவுணைச் சேர்ந்த நெல்லை கண்ணன் பட்டிமன்ற பேச்சாளர், சொற்பொழிவாளர், இலக்கியவாதி, அரசியல் பேச்சாளர் என பன்முகத் திறமை கொண்டவர். குறிப்பாக, காமராஜர், கலைஞர் கருணாநிதி, கண்ணதாசன் மற்றும் தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் போன்ற தலைவர்களுடன் நெருங்கிப் பழகியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இவர் தனது மேடைப்பேச்சுகளில் அதிரடியாக பேசுபவர். தமிழ்நாடு அரசின் இளங்கோவடிகள் விருதை சமீபத்தில் பெற்றிருந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். கடந்த 2020ல் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான முஸ்லிம் அமைப்பு மாநாட்டில் பேசிய அவர், குறிப்பாக, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்து பொது மேடையில் அவதூறாகப் பேசியதாகக் கூறி, நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டிருந்தார்.
மேலும், நெல்லை உள்ளூர் வழக்காடு மொழியில் பேசும் இவரது பேச்சு பலராலும் ரசிக்கும் வகையில் இருக்கும். காமராஜர் மீது அதிகப்பற்றும் பாசமும் கொண்டவர். எனவே, அனைத்து மேடைகளிலும் காமராஜரைப் பற்றி பெருமையாகப் பேசுவார். மேலும், இவர் குறுக்குத்துறை ரகசியங்கள், வடிவுடை காந்திமதியே போன்ற நூல்களை எழுதியுள்ளார். குறிப்பாக, இவர் எழுதிய குறுக்குத்துறை ரகசியங்கள் என்ற நூல் மிகவும் பிரபலமானது. நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள குறுக்குத்துறை குறித்து அந்த நூலில் எழுதி இருப்பார்.
இந்நிலையில் நெல்லை கண்ணன் கடந்த ஆண்டு உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். எப்போதும் சமூக வலைதளங்களில் குறிப்பாக, முகநூலில் தொடர்ந்து பதிவுகள் எழுதிவந்த அவர், கடந்த ஆண்டு 2022 ஜூலை 4ஆம் தேதிக்குப் பின் எந்த பதிவுகளும் எழுதவில்லை. அதன்பின் தான் மருத்துவச் செலவுக்கு சிரமப்படுவதாகவும், வாய்ப்பிருப்பவர்கள் உதவுமாறும் தன் முகநூலில் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நெல்லை கண்ணன் உயிரிழந்தார். அவரின் நினைவாக நெல்லை டவுண் ஆர்ச்சில் இருந்து குறுக்குத்துறை சாலையில் இணையும் தென் வடல் சாலைக்கு அவரின் பெயரை சூட்ட நெல்லை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் நெல்லை மாநகராட்சிக்கு அனுப்பிய கடிதத்தில், டவுண் குறுக்குத்துறை ஆர்ச்சில் இருந்து குறுக்குத்துறை சாலையில் இணையும் தென்வடல் சாலைக்கு, நெல்லை கண்ணன் சாலை என்று பெயரிட மாமன்றம் அனுமதி அளிக்கலாம் என்று கூறியுள்ளார்.
முதன்மைச் செயலாளரின் கடிதத்தைத் தொடர்ந்து நாளை (ஜூலை 27)நடைபெறும் நெல்லை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் மேற்கண்ட சாலைக்கு நெல்லை கண்ணன் பெயரை சூட்டுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது என்பதை கேள்விப்பட்டு அவரின் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:வறண்டு போகும் மேட்டூர் அணை.. டெல்டா விவசாயிகள் சோகம்... முதல்வர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை?