மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்கள் சந்திப்பு திருநெல்வேலி: நெல்லை மாவட்ட பாஜக பிரமுகர் பாண்டியன் இல்லத் திருமண விழா, பாளையங்கோட்டை அடுத்த சாந்திநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "தமிழக ஆளுநர் மாளிகை முன்பாக பெட்ரோல் குண்டு வீசிய குற்றவாளியை திமுகவை சார்ந்த வழக்கறிஞர்கள் இரண்டு பேர் தான் ஜாமீன் எடுத்துள்ளனர். குறிப்பாக ஜாமீன் எடுத்த இசக்கி பாண்டியன் மற்றும் நிசாந்த் இரண்டு பேரும் திமுகவில் பொறுப்பில் உள்ளனர்.
திராவிட முன்னேற்ற கழகம் இந்திய அரசியல் அமைப்பின் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது. காவல்துறையை கையில் வைத்துள்ள முதலமைச்சர் தூங்கிக் கொண்டிருக்கிறார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்ட நிலையில் உள்ளது. தமிழகத்தில் ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லை என்ற நிலையில், சாதாரண மக்களுக்கு பாதுகாப்பு என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது" என்று குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், ராஜ் பவன் மீது பெட்ரோல் குண்டு வீசுய குற்றவாளியின் பின்புலம் என்ன, குற்றவாளியின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது சிபிஐ (CBI) அல்லது என்ஐஏ (NIA) விசாரணை மேற்கொண்டால் தான் உண்மை நிலவரம் என்ன என்பது தெரியவரும். உதராணத்திற்கு கோவையில் நடந்ததை சிலிண்டர் வெடித்ததாக தமிழக அரசு மூடி மறைக்கப் பார்த்தது.
ஆனால், என்ஐஏ விசாரணை மேற்கொண்ட போது தான் உண்மை என்ன என்பது தெரியவந்தது. அதுமட்டுமின்றி பாலஸ்தீன கோடியை ஏற்றுவது போன்ற தேசத் துரோக செயல்கள் நடைபெறுகிறது. இதையெல்லாம் தமிழக காவல் துறையினர் வேடிக்கை பார்க்காமல், குற்றவாளிகள் மீதும் அவர்களின் பின்புலத்தில் இருக்கக்கூடியவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
மேலும்ம், "ஆளுநர் மாளிகை முன்பு தாக்குதல் நடத்தியது அரசியல் அமைப்பின் மீது தாக்குதல் நடத்தியது போன்றதாகும். இச்சம்பவத்தின் பின்னணியில் திமுகவினர் உள்ளார்களா என்பது, தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தினால் தான் தெரிய வரும்.
திமுகவினருக்கு அரசியல் அமைப்பு சட்டத்தின் மீது நம்பிக்கை இல்லை. அதனால் தான், அரசியல் அமைப்பு சட்டப்படி செயல்படும் ஆளுநரை தரை குறைவாகவும், ஒருமையிலும் பேசி வருகின்றனர். இத்தகைய சம்பவம் எல்லாம் வன்மையாக கண்டிக்கக் கூடியது. இத்தகைய அநாகரீகமான செயல்களை விட்டு விட்டு, தமிழகத்தின் சட்ட ஒழுங்கை நிலை நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என சாடினார்.
அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, "கடந்த 9 ஆண்டுகால பாஜக ஆட்சியில், இதுவரை எந்த மாநில அரசு மீதும் பாஜக கை வைத்ததில்லை. 356 பிரிவை பயன்படுத்தும் எண்ணம் பாஜகவிற்கு கிடையாது. ஆனால் ஆளுநர் மாளிகை மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு, தமிழக முதலமைச்சர் தான் முழு பொறுப்பேற்க வேண்டும்" என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பதிலளித்தார்.
இதையும் படிங்க: நீட் விலக்கு மசோதவிற்கு உடனடியாக ஒப்புதல் வழங்க குடியரசுத் தலைவரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் வலியுறுத்தல்!