திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தடுப்பு சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள அபூர்வா தலைமையில், ஆட்சியர் அலுவலகத்தில் கரோனோ பாதிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆட்சியர் ஷில்பா பிரபாகர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, சுகாதாரத் துறை அலுவலர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
பின்னர், சிறப்பு அலுவலர் அபூர்வா செய்தியாளர்களிடம் பேசுகையில், "திருநெல்வேலியில் இதுவரை 823 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 600 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 218 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருநெல்வேலியில் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. வரும் நாள்களில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும் அனைவருக்கும் சிகிச்சையளிப்பதற்கான அனைத்து மருத்துவ வசதிகளும் தயார் நிலையில் உள்ளன.
அரசு மருத்துவமனை தவிர தனியார் கல்லூரிகளிலும் சிறப்பு வார்டு அமைப்பதற்கான வேலைப்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்தாலும் சிகிச்சையளிக்கத் தயாராக உள்ளோம். இதுவரை 45 ஆயிரம் பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 700 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இங்கு, நாள்தோறும் சுமார் ஆயிரத்து 800 பேர் வரை பரிசோதனை செய்யக்கூடிய அளவிற்கு வசதிகள் உள்ளன.