திருநெல்வேலி: மாநகராட்சி ஆணையராக விஷ்ணு சந்திரன் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். பணியில் சேர்ந்த நாள் முதல் ஆணையர் விஷ்ணு சந்திரன் நாள்தோறும் பல்வேறு ஆய்வுகளை நடத்தி அதிரடி காட்டிவருகிறார். குறிப்பாக காலை வேளையில், மாநகரில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இந்த சூழ்நிலையில் இன்று ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மிதிவண்டி பாதை அமைக்கும் பணியின் தொடக்க நிகழ்ச்சியின்போது ஒப்பந்ததாரரை பார்த்து மூன்று மாதங்களுக்குள் பணியை முடித்து தரும்படி ஆணையர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டது அங்கிருந்தவர்களை அதிர்ச்சி அடைய செய்தது.
மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேலப்பாளையம் மண்டலத்துக்கு உட்பட்ட என்ஜிஓ காலனி பெரிய சாலையில் 2.84 கோடி மதிப்பில் 1800 மீட்டர் தூரத்திற்கு பிரத்யேக மிதிவண்டி பாதை அமைக்கும் பணிகள் துவக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன் கலந்து கொண்டார்.
அப்போது அங்கிருந்த ஒப்பந்ததாரர் வெள்ளப்பாண்டியை அழைத்து இந்த பணியை எப்போது முடித்துக் கொடுப்பீர்கள் என்று ஆணையர் கேட்டார். அதற்கு ஒப்பந்ததாரர் பாண்டியன், நான் கணக்கு போட்டு பார்த்துவிட்டு யோசித்து சொல்கிறேன் என்று கூறினார். உடனே ஆணையர் அவரைப் பார்த்து, கணக்கு போட்டு சொல்வதற்கு ஒன்றுமில்லை, அவ்வளவு பெரிய வேலையும் கிடையாது எனவே மூன்று மாதங்களுக்குள் கண்டிப்பாக பணியை முடித்துக் கொடுங்கள் என்று கறாராகக் கூறினார்.
இதையடுத்து ஒப்பந்ததாரர் பதில் பேச முடியாமல் ஓகே சார் என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார். மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அங்கு வந்த பிறகு இருவரும் சேர்ந்து மிதிவண்டி பாதை அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தனர்.