விஜயகாந்தின் மறைவு குறித்து அவரின் பள்ளி ஆசிரியர் உருக்கம் திருநெல்வேலி: தேமுதிக நிறுவனத் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் நேற்று (டிச.28) உடல்நலக் குறைவால் காலமானார். விஜயகாந்த்தை நடிகராகவும், அரசியல்வாதியாகவும், சிறந்த மனிதராகவும் அறிந்த பலருக்கும் கூட அவரின் சொந்த வாழ்வு குறித்து முழுவதும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த வகையில், விஜயகாந்த் மதுரையைச் சேர்ந்தவர் என்பது பலரும் அறிந்த விஷயமாகும்.
ஆனால் அவர் தனது இளமைப் பருவத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் விடுதியில் தங்கியபடி இரண்டு ஆண்டுகள் பள்ளி பயின்றதை பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. விஜயகாந்த்திற்கு சரிவர படிப்பில் ஆர்வம் ஏற்படாததால், விடுதியில் தங்கி படிக்க வைத்தால் படிப்பில் மாற்றம் ஏற்படும் என அவரது பெற்றோர்கள் எண்ணியுள்ளனர்.
அதன்படி, மதுரையில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பகுதியில் அமைந்துள்ள புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் விஜயகாந்தை 9ஆம் வகுப்பில் சேர்த்துள்ளனர். பின்னர், அவர் விடுதியில் தங்கியபடி ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பினை அப்பள்ளியில் முடித்தார்.
விஜயகாந்தின் மறைவைத் தொடர்ந்து, அவரது நெருங்கிய ஆதரவாளர்கள் விஜயகாந்த் உடனான நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், நெல்லை விக்ரமசிங்கபுரம் பள்ளியில் நடிகர் விஜயகாந்திற்கு அறிவியல் பாடம் எடுத்த ஆசிரியர் நல்லையா, விஜயகாந்த் குறித்து நம்மிடம் சில உருக்கமான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
இதுகுறித்து நல்லய்யா கூறுகையில், “மதுரை மட்டுமல்ல, பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்தும் அப்போது வசதி படைத்தவர்கள் தங்கள் குழந்தைகளை எங்கள் பள்ளியில் வந்து சேர்ப்பார்கள். அப்படித்தான் விஜயகாந்த்-ம் மதுரையில் இருந்து இங்கு படிக்க வந்தார். பள்ளிப் பருவத்தில் அவர் நடனமாடுவதில் ஈடுபாடு கொண்டிருந்தார். ஆனால், அவர் பின்னாளில் சினிமா மற்றும் அரசியலில் மிகப்பெரிய ஆளாக வருவார் என்று நாங்கள் யாரும் நினைத்துப் பார்க்கவில்லை.
விஜயகாந்த் உடன் ஒரே பெஞ்சில் அமர்ந்து படித்த எனது மற்றொரு மாணவரான பாலு என்பவர் சொல்லித்தான், விஜயகாந்த் சினிமாவில் நடித்து வருவது எனக்குத் தெரியவந்தது. விஜயகாந்தை சந்திக்க எங்கள் பள்ளியில் இருந்து எந்த ஆசிரியர் சென்றாலும், அன்போடு வரவேற்பார். அவர் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு சென்ற பிறகு, முதல் முறையாக அவரைத் திரையில் தான் பார்த்தேன்.
அதன் பிறகு ஒரு முறையாவது சந்திக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் எனது உடல்நலம் ஒத்துழைக்காததால், கடைசி வரை விஜயகாந்தை சந்திக்க முடியவில்லை. ஆனாலும், அவர் என்னை எப்போதும் நினைவில் வைத்திருந்தார்.
எங்கள் பள்ளியின் 75வது ஆண்டு விழாவின் போது விஜயகாந்த் அனுப்பிய வாழ்த்து மடலில், எனது பெயரையும் குறிப்பிட்டு என்னைப் பெருமைப்படுத்தி இருந்தார். விஜயகாந்தின் இழப்பு எங்கள் பள்ளிக்கும், எங்கள் குடும்பத்திற்கும் பேரிழப்பாகும். எனது குடும்பத்தில் ஒருவரை இழந்தது போல் உணர்கிறேன்” என உருக்கமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க:'அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார்' - ரஜினிகாந்த் விஜயகாந்த் குறித்து உருக்கம்