திருநெல்வேலி:திருநெல்வேலி டவுன் பகுதியில் அரசு உதவிபெறும் சாஃப்டர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டுவருகிறது. இன்று (டிசம்பர் 17) காலை பள்ளியின் கழிவறை தடுப்புச் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் விஸ்வரஞ்சன், அன்பழகன், சுதிஸ் என்ற மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர்.
நான்கு மாணவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி பள்ளி விபத்து பள்ளியில் விபத்து நடந்த இடத்தை திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் செந்தாமரை கண்ணன், துணை ஆணையர் சுரேஷ்குமார், உயர் அலுவலர்கள் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் சம்பவம் தொடர்பாக திருநெல்வேலி முதன்மைக் கல்வி அலுவலர் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தலைமை ஆசிரியையிடம் விசாரணை
இந்த நிலையில், விபத்து குறித்து விசாரணை நடத்துவதற்காக பள்ளியின் தலைமை ஆசிரியை ஞான செல்வியை நெல்லை சந்திப்பு காவல் துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். பள்ளி தாளாளர் உள்பட பள்ளி நிர்வாகத்தினர் மேலும் சிலரை காவல் துறையினர் விசாரிக்க உள்ளனர். விசாரணைக்குப் பிறகு முறைப்படி புகார் பெறப்பட்டு பள்ளி தலைமை ஆசிரியை, மேலும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக முதலமைச்சர் ஸ்டாலின் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து நிவாரணம் அறிவித்துள்ளார். அதன்படி உயிரிழந்த மூன்று மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சமும், காயமுற்ற நான்கு மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பள்ளியில் சுவர் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழப்பு: தமிழிசை இரங்கல்