நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் போலீசார், விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட கைதிகளின் பற்களைப் பிடுங்கி கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பான செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஏஎஸ்பி பல்வீர் சிங் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு, பிறகு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதேபோல் அம்பாசமுத்திரம் காவல் சரகத்தில் பணியாற்றிய போலீசார் சிலரும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக, மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் கடந்த 10ஆம் தேதி அம்பாசமுத்திரம் தாலுகா அலுவலகத்தில் விசாரணையை தொடங்கினார். ஆனால், அன்று விசாரணைக்கு யாரும் ஆஜராகவில்லை.
இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக நேற்று(ஏப்.17) விசாரணையை தொடங்கினார். அப்போது, தாலுகா அலுவலகத்தில் இருந்த போலீசார் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பின்னர், 10-க்கும் மேற்பட்டோர் விசாரணை அதிகாரி அமுதா முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். நேற்று ஒரேநாளில் இரண்டு சிறார்கள் உள்பட 14 பேர் ஆஜராகினர்.