திருநெல்வேலி: பொதுவாக மண் சார்ந்த பொருட்கள் என்பது தமிழர்களின் பாரம்பரியமாகும். ஆனால், நவ நாகரிகத்தை நாடிச் சென்ற தமிழ் மக்கள் சிலர் காலப்போக்கில் மண்பாண்ட பொருட்கள் பயன்படுத்துவதைத் தவிர்த்து வருகின்றனர் எனவே கூறலாம். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை, சமையல் செய்வதில் தொடங்கி பொங்கல் வைப்பது, தண்ணீர் அருந்துவது என அனைத்தும் மண்பாண்ட பொருட்களையே பயன்படுத்தினர்.
ஆனால், தமிழ்நாட்டில் சமீப காலமாக பெரும்பாலான மக்கள் பொங்கல் பண்டிகை தினத்தில் மண்பானைகளுக்கு பதில் சில்வர் மற்றும் பித்தளைப் பாத்திரங்களில் தான் பொங்கல் வைக்கின்றனர். இந்தச் சூழலில் நெல்லை மாவட்டத்தில் தயாரிக்கும் மண் பானைகளுக்கு வெளிநாடுகளில் மவுசு கூடி வருவதால், உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
பொங்கல் பண்டிகைக்குத் தயாரிக்கப்படும் தாமிரபரணி ஆற்றின் கரையோரப் பகுதியில் உள்ள நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மண்பாண்டம் தயாரிக்கும் பணிகள் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது. தாமிரபரணி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் உள்ள குளங்களிலும், ஆற்றின் கரையோரத்திலும் கிடைக்கும் தரமான களிமண்களால் செய்யப்படும் இந்த மண்பாண்டப் பொருள்களில் செய்யப்படும் உணவு பதார்த்தங்களுக்கு தனி சுவை இருக்கும்.
5 ஸ்டார் ஹோட்டலில் மண்பானை: இந்தப் மண்பாண்ட பொருள்களுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகம் என்று மட்டுமல்லாமல் வளைகுடா நாடுகள், மலேசியா, சிங்கப்பூர் ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் அதிக மவுசு உள்ளது எனவே கூறலாம். அகல் விளக்குகள், தேநீர் கோப்பைகள், தண்ணீர் பாட்டில்கள், அலங்கார பூச்சட்டிகள், சாம்பிராணி கிண்ணம், பிரியாணி சட்டிகள், சூப் கிண்ணம், பொங்கல் வைப்பதற்கான மண் பானைகள் உள்ளிட்டப் பல்வேறு பொருட்கள் நெல்லையில் செய்யப்பட்டு வருகிறது.
வெளிநாடுகளில் உள்ள பல்வேறு ஐந்து நட்சத்திர(5 Star) ஹோட்டல்களில், பிரியாணி மற்றும் உணவு பதார்த்தங்கள் இது போன்ற மண்பாண்டங்களில் பரிமாறப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதையொட்டி ஆண்டுக்கு 30 கோடி வரை இந்த மண்பாண்டங்கள் தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதி ஆகிக்கொண்டிருந்தன.
உயர்ந்த பானை ஆர்டர்: ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா காலத்தில் வெளிநாடுகளுக்கு எந்த விதப் பொருட்களும் ஏற்றுமதி செய்யப்படாமல் இருந்து வந்த நிலையில், தற்போது தமிழர்கள் அதிகம் வாழும் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் பொங்கல் பானைகள் ஏற்றுமதிக்கான ஆர்டர்கள் கிடைத்துள்ளன என்கின்றனர் உற்பத்தியாளர்கள்.