திருநெல்வேலி:தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை பொருநை வைகை, சிறுவாணி உட்பட ஐந்து இடங்களில் இலக்கிய திருவிழா நடத்தப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதன் ஒரு பகுதியாக முதல் திருவிழாவாக நேற்று (நவ.26)நெல்லை பொருநை இலக்கிய திருவிழா தொடங்கியது.
சென்னையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக இந்த பொருதை திருவிழாவை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி உட்பட முக்கிய பிரமுகர்கள் திருவிழாவில் நேரில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மேலும் திருவிழாவின் முக்கிய அம்சமாக பள்ளி கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் பல்வேறு இலக்கியம் சார்ந்த போட்டிகள் நடைபெற்றது.
இந்த நிலையில் இலக்கிய திருவிழாவை ஒட்டி பாளையங்கோட்டை மேடை காவல் நிலையத்தில் நடைபெற்ற தேவராட்டம் அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ்நாட்டின் பாரம்பரிய நிகழ்ச்சிகளில் தேவராட்டமும் ஒன்று, தென் மாவட்டத்தில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கோடாங்கிப்பட்டி என்ற கிராமத்தில் இன்றளவும் கம்பளத்து நாயக்கர் சமுதாயத்தினர் இந்த தேவராட்டத்தை கடைப்பிடித்து வருகின்றனர்.
நெல்லை பொருநை விழாவில் கவனம் ஈர்த்த தேவராட்டம் இலக்கிய திருவிழா என்பதால் பாரம்பரிய நிகழ்ச்சிக்காக நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தேவராட்டம் நடனத்தை ஏற்பாடு செய்திருந்தார். அதன்படி பாளை மேடை காவல் நிலையத்தில் நடைபெற்ற இந்த தேவராட்டத்தை பார்வையாளர்கள் வெகுவாக கண்டு ரசித்தனர். மேளம் இசைக்க 17 பேர் தலைப்பாகை அணிந்தபடியும் இடுப்பில் நீண்ட அணிந்தபடியும் ஆடினர். மேலும் தேவராட்டம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க:'தமிழின் பெருமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நமது கடமை'