திருநெல்வேலி மாவட்டம் ரெட்டையார்பட்டி அடுத்த சிவந்திபட்டி செல்லும் வழியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான குடோன் உள்ளது. இங்கு நெல்லை மாவட்ட ரேசன் கடைகளுக்கு தேவையான அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் டன் கணக்கில் சேமித்து வைக்கப்படுவது வழக்கம்.
இந்த குடோன் அமைந்துள்ள பகுதி அருகே தமிழ்நாடு அரசால் 50க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இலவச பட்டா கொடுக்கப்பட்டுள்ளது. அதில் அந்த குடும்பத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அருகில் இருக்கும் அரிசி குடோனிலிருந்து ஏராளமான வண்டுகள் வீடுகளுக்குள் வருவதால் பொதுமக்கள் தூக்கத்தை தொலைத்து தவித்துவருகின்றனர். குடோனில் அரிசி மூட்டைகள் மாதக்கணக்கில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதால், சிறிய வண்டுகள் அந்த அரிசியில் இருந்து உருவாகியுள்ளது. இந்த வண்டுகள் அருகில் உள்ள குடியிருப்புகளில் கண்ணுக்கு தெரியாதபடி பறந்து சென்று இரவு நேரங்களில் பல்பு வெளிச்சத்திற்கு வீடுகளில் தஞ்சம் அடைகின்றன. வண்டுகள் கண், மூக்கு, காது வழியாக உள்ளே செல்வதால் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக இப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.