கரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக தமிழ்நாடு முழுவதும் ஏழை எளிய மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசு சார்பில் ரமலான் நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ரமலான் மானிய அரிசியை தமிழக முதலமைச்சர் கரோனா நிதி ஆதாரத்தில் சேர்த்துக்கொள்ளும்படி நெல்லை, பாளையங்கோட்டையைச் சேர்ந்த பள்ளிவாசல் ஜமாத்தினர் தமிழக அரசைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
”கரோனா தொற்றைத் தடுக்கும் பொருட்டு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பள்ளிவாசலில் பொதுமக்களுக்கு நோன்புக் கஞ்சி வழங்க முடியாது. இந்த அசாதாரண சூழ்நிலையில் தனிமனித இடைவெளியைப் பின்பற்றி நோன்பு கஞ்சி விநியோகம் செய்வது இயலாத காரியம், எனவே இந்த வருடம் அரசு தரவிருக்கும் ரமலான் மானிய விலை அரிசியை கரோனா நிதி ஆதாரத்தில் சேர்த்துக் கொள்ளும்படி அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளோம்” எனத் தெரிவித்தனர்.
ரமலான் மானிய அரிசியை முதலமைச்சரின் கரோனா நிதி ஆதாரத்திற்கு வழங்கிய ஜமாத்துகள் இதன்படி பாளையங்கோட்டை ஜமாத்தினர் உள்பட 13 ஜமாத்துகளுக்கு ஒதுக்கப்பட்ட அரிசியை தமிழக முதலமைச்சரின் கரோனா நிதி ஆதாரத்தில் சேர்க்கக் கோரும் மனுவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷிடம் ஜாமாத்துகளைச் சேர்ந்தவர்கள் கூட்டாக சென்று அளித்துள்ளனர்.
இதையும் படிங்க:சுங்கக் கட்டண வசூலை உடனடியாக நிறுத்த வேண்டும் - திருமாவளவன் கோரிக்கை