தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“குயில்லன் பார்ரே” என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட நபரை குணமடையச் செய்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாதனை!

Tirunelveli Doctors: நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரிய வகை நோய் பாதிக்கப்பட்டு 80 நாட்களுக்கு மேல் செயற்கை சுவாசத்தில் இருந்த இளைஞரை, பூரண குணம் அடையச் செய்து தேசிய அளவில் நெல்லை மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட இளைஞரை பூரண குணமாக்கிய நெல்லை மருத்துவர்கள்
அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட இளைஞரை பூரண குணமாக்கிய நெல்லை மருத்துவர்கள்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 30, 2023, 10:12 PM IST

Updated : Sep 30, 2023, 10:50 PM IST

“குயில்லன் பார்ரே” என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட நபரை குணமடையச் செய்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாதனை!

திருநெல்வேலி: தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (32). இவர் அரபு நாடுகளில் பணி செய்து வந்துள்ளார். கிருஷ்ணமூர்த்தி, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழகம் திரும்பிய நிலையில், அவருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

4 நாட்கள் சிகிச்சை பெற்ற நிலையில், அவரது கை, கால்கள் செயலிழந்த நிலைக்கு மாறி உள்ளது. இதனைத் தொடர்ந்து, தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். இங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு ‘குயில்லன் பார்ரே’ குறைபாடு இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

இந்த வகையான நோய் மிகவும் அரிதாகவே மனிதர்களைத் தாக்கி பாதிப்புகளை ஏற்படுத்தும். கடந்த ஜூன் 17-ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இவருக்கு, சிகிச்சை தொடங்கிய ஒரு சில நாட்களிலேயே சுவாசக் கோளாறு ஏற்பட்டு செயற்கை சுவாசம் வழங்கக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். தொடர்ந்து இவரை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் அனுமதித்து, பிளாஸ்மா பெராசிஸ் என்ற உயர்ரக மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கான பணிகளை மேற்கொண்டு, நான்கு முறை அந்த சிகிச்சையை அவருக்கு செய்துள்ளனர்.

ஆனாலும், அந்த நபருக்கு கை, கால்கள் மற்றும் சுவாசத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இருப்பினும் மருத்துவர்கள் தொடர்ந்து பல்வேறு வகையான சிகிச்சைகளை அவருக்கு மேற்கொண்டனர். மேலும், செயற்கை சுவாசம் தொடர்ந்து அளிக்கப்படும் சூழல் இருந்து வந்ததால், தொண்டையில் சிறு துளையிட்டு செயற்கை சுவாசத்தை தொடர்ந்து கொடுத்து வந்துள்ளனர்.

இவ்வாறு இளைஞருக்கு பல்வேறு சிகிச்சை அளித்தும் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் அறிவுறுத்தலின்படி, மருத்துவக் கல்லூரியின் பல்வேறு துறை சார்ந்த பேராசிரியர்கள் குழுவை நியமித்து தொடர் சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இந்த மருத்துவக் குழு அளித்த தீவிர சிகிச்சையால் அந்த நபர் முன்னேற்றம் கண்டு தற்போது இயல்பாக சுவாசிக்கும் தன்மையைப் பெற்றுள்ளார்.

மேலும் சாதாரண மனிதர்களைப்போல நடமாடும் நிலைக்கு உடல் முன்னேற்றம் அடைந்துள்ளது. தொடர்ந்து நீண்ட நாட்களாக செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை பெற்று வந்த இளைஞருக்கு, மனநல மருத்துவரின் ஆலோசனைகள் வழங்கி இயல்பு நிலைக்கு மருத்துவர்கள் கொண்டு வந்துள்ளனர். இந்த அரிய வகை நோய் பாதிக்கப்பட்ட நபரை சாதாரண மனிதரைப்போல் நடமாடச் செய்த மருத்துவர்களின் முயற்சி, மருத்துவ வரலாற்றில் மிக அரிதான நிகழ்வாக கருதப்படுகிறது.

மிக நீண்ட நாட்கள் செயற்கை சுவாசத்தில் இருந்த நபர் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியதில் இவரே முதல் நபர் ஆவார் எனவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இந்த நோய் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்கள் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டதில், உலக அளவில் மீண்ட நபர்கள் மிகவும் அரிது எனவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அளவில் நாக்பூரில் இதே நோய் பாதிக்கப்பட்டு ஒரு இளம் பெண் 75 நாட்கள் சிகிச்சையில் இருந்து சக்கர நாற்காலியில் வெளியே வரும் நிலை இருந்ததை, தற்போது நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் குழு குயில்லன் பார்ரே குறைபாட்டால் பாதிக்கப்பட்ட நபருக்கு தீவிர சிகிச்சை அளித்து, சாதாரண மனிதரைப்போல நடமாட வைத்து சாதனை செய்துள்ளனர்.

இது தொடர்பாக மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் கூறும்போது, “இதே சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்தால், வெண்டிலேட்டர் சுவாசத்திற்கு மட்டும் 40 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யும் நிலை உருவாகி இருக்கும். இந்த நோய் பாதிக்கப்பட்ட நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தால் ஒரு கோடி ரூபாய் வரை செலவு செய்திருக்க நேரிடலாம்” என தெரிவித்தார்.

தற்போது தமிழக அரசின் மருத்துவக் காப்பீடு மற்றும் தமிழக அரசு சார்பில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள அதிநவீன உபகரணங்கள் உதவியுடன் அளிக்கப்பட்ட சிகிச்சையின் காரணமாக, இளைஞர் தற்போது மறுவாழ்வு பெற்றிருப்பதாக தெரிவித்தனர்.

மேலும், காய்ச்சல் டியோரியா போன்ற பாதிப்புகள் இந்த நோய்க்கான முதல் அறிகுறியாக தென்பட்டு, படிப்படியாக கை, கால் செயலிழந்து சுவாசக்கோளாறு ஏற்பட்டு, முறையாக கவனிக்கப்படவில்லை என்றால் உயிரிழப்பு வரை நேரிடலாம் எனவும் தெரிவித்தனர்.

சாதாரண பாதிப்பு ஏற்பட்டு இந்த நோய் அறிகுறி கண்டறியப்பட்டால், உடனடியாக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை நோயாளிகள் அணுகி, முறையான சிகிச்சை பெற்று நல்ல உடல் நலத்துடன் மீண்டு வருவதற்கு மருத்துவர்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:“எடப்பாடி பழனிசாமியை வருங்கால முதலமைச்சராக ஏற்றுக்கொள்ளும் கட்சியோடுதான் கூட்டணி” - பொள்ளாச்சி ஜெயராமன்

Last Updated : Sep 30, 2023, 10:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details