திருநெல்வேலி: நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளரும், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் வகாப்புக்கும், மாநகராட்சி மேயர் சரவணனுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்த நிலையில், மாவட்டச் செயலாளர் தூண்டுதலின் பேரில், அவரது ஆதரவு கவுன்சிலர்கள் மேயரை மாற்றக்கோரி போர்க்கொடி தூக்கியுள்ளனர் எனவும், ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் பெறுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே உட்கட்சிப் பூசல் பூதாகரமாக வெடித்திருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
குறிப்பாக சமீபத்தில் நடைபெற்ற மாநகராட்சி மன்றக் கூட்டத்தில், 15-வது வார்டு கவுன்சிலர் அஜய், “மேயர் சரவணன் தனது அறைக்குள் திமுக நிர்வாகிகளை அழைத்து வைத்து ஒப்பந்ததாரர்களிடம் பேரம் பேசுகிறார்” என்று வெளிப்படையாக, மேயர் மீது குற்றச்சாட்டை முன் வைத்தார். இதுபோன்ற சூழலில்தான் மாவட்டச் செயலாளரின் ஆதரவு கவுன்சிலர்கள், மேயருக்கு எதிராக தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே அரசு கட்டடப் பணிக்கான ஒப்பந்தத்தை தனக்கு வேண்டிய நிறுவனத்திற்கு ஒதுக்கித் தரும்படி மாவட்டச் செயலாளர் அப்துல் வகாப், அமைச்சருக்கு பரிந்துரை செய்து அனுப்பிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே மேயர் விவகாரத்தில் திமுக மீது அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் ஒரு வித அதிருப்தி ஏற்பட்டுள்ள நிலையில், மாவட்டச் செயலாளரின் இந்த கடிதம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் மாவட்டச் செயலாளரின் ஆதரவு கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் ஊழல் குற்றச்சாட்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர். இது போன்ற சூழ்நிலையில், நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் அரசு ஒப்பந்ததாரரிடம் தனக்கும், மாவட்ட பொறுப்பு அமைச்சருக்கும் 18 சதவீதம் கமிஷன் தர வேண்டும் என்று கேட்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.