தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருக்குறுங்குடி பாலம் விவகாரத்தில் மதிமுகவுக்கு வெற்றி - திருக்குறுங்குடி பேரூராட்சி ஆவரந்தலை

திருநெல்வேலி: திருக்குறுங்குடி பாலம் இடிந்து விழுந்த விவகாரத்தில், தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுசெயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

திருக்குறுங்குடி பாலம் இடிந்து விழுந்த விவகாரம்: மதிமுகவிற்கு கிடைத்த வெற்றி
திருக்குறுங்குடி பாலம் இடிந்து விழுந்த விவகாரம்: மதிமுகவிற்கு கிடைத்த வெற்றி

By

Published : Oct 21, 2020, 12:08 PM IST

இதுதொடர்பாக மதிமுக பொதுசெயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி பேரூராட்சி ஆவரந்தலை செல்லும் சாலையில் நம்பி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் 01.12.2017 நள்ளிரவு இடிந்து விழுந்தது.

இப்பாலம் முறையாகக் கட்டப்படவில்லை என்றும், நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்கு முன்பாகவே கட்டி முடிக்கப்பட்டுவிட்டது என்றும் எழுந்த புகாரின் பேரில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, இப்பாலம் இடிந்து விழுந்ததற்குக் காரணமான அனைவர் மீதும் நடவடிக்கை எடுத்தக்கோரி மதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது.

05.12.2017 அன்று சென்னையில் உள்ள தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்ற நடுவத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. பேரூராட்சி நிர்வாகத்தின் பல அலுவலர்கள் ஆணையத்தில் ஆஜராகி, குமரி மாவட்டத்தை தாக்கிய ஒக்கி புயலால், நம்பி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதன் காரணமாகத்தான் பாலம் இடிந்து விழுந்தது என்று பதிலுரை தந்தனர்.

இதுதொடர்பாக, அண்ணா பல்கலைக் கழகத்தின் கட்டடவியல் மற்றும் வடிவமைப்பு துறைத் தலைவர் டாக்டர் ஆர்.செந்தில் தலைமையில் விசாரணை குழு ஆய்வறிக்கை சமர்பித்தது.

அந்த ஆய்வறிக்கையில், பாலத்தின் அடித்தள விபரமே தங்களிடம் இல்லை என்று பேரூராட்சி நிர்வாகம் மறைத்துவிட்டதாகவும், பாலத்தின் கட்டமைப்பு, வடிவமைப்பு விபரங்களை பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது தரவில்லை என்றும், கிடைக்கப்பெற்ற தொழில்நுட்ப ஆவணங்களின்படி பாலக் கண் அளவுகள் (Span) மாற்றி அமைக்கப்பட்டு உள்ளதும், பாலத்தைக் கட்டும்போது பக்கவாட்டில் ஏற்படும் உதைப்பு (Lateral thrust) கணக்கிடப்பட்டதாகத் தெரியவில்லை என்றும், பாலம் கட்டப்பட்ட இடமே சரியில்லை என்றும், குறுகிய காலத்தில் சரியான முறையில் நனைப்பு (curing) செய்யப்படவில்லை என்றும், அதன் காரணமாக கான்கிரீட் சரியான உறுதித் தன்மையைப் பெற வாய்ப்பு இல்லை எனவும், இதுவே பாலம் இடிந்து விழுந்ததற்குக் காரணம் எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டது.

அண்ணா பல்கலைக் கழக தொழில்நுட்பக் குழு தந்த அறிக்கையில் தெரிவித்துள்ள குறைபாடுகளே பாலம் இடிந்ததற்கான காரணமாகும் என்பதை உறுதி செய்ததோடு, இந்தக் குறைபாடுகளுக்குக் காரணமான அலுவலர்கள் மீது தக்க ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பேரூராட்சிகளின் இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளது.

இடிந்து விழுந்த பாலத்திற்குப் பதிலாக மாற்றுப் பாலம் கட்டுவதாக அரசுத் தரப்புச் சொன்னதே தவிர, 55 லட்ச ரூபாய் செலவில் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட பாலம் 10 மாத காலத்தில் எப்படி இடிந்து விழுந்தது என்பதற்கு பதில் ஏதும் இல்லை. இது பாலம் முறையாகக் கட்டப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.

அரசு கட்டுமானத் துறைகளில் பணியாற்றுவோர் விழிப்பாக இருந்து, கவனமாகக் கடமையாற்றிடவில்லை எனில் பாதிக்கப்பட நேரிடும் என்கிற எச்சரிக்கையையும் இத்தீர்ப்பு உணர்த்துகிறது.

பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் நடைபெறும் முறைகேடுகளை விசாரிதது தீர்ப்பு அளிக்க அரசியல் அமைப்புச் சட்டப்படி உருவாக்கப்பட்ட மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு இணையான அதிகாரம் கொண்ட தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளின் முறைமன்ற நடுவம், நடுநிலை தவறாமல் நியாயத்தின் பக்கம் நின்று வழங்கிய தீர்ப்பை வரவேற்கிறேன்.

55 இலட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்து, பொதுச் சொத்துக்கு நாசம் விளைவித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திட மறுமலர்ச்சி திமுக சார்பில் வலியுறுத்துகின்றேன்" எனத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details