திருநெல்வேலி:அரபிக்கடலில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. இந்த அதி கனமழையால் தாமிரபரணி ஆறு, கோதையாறு, குழித்துறை ஆறு உள்ளிட்ட ஆறுகளில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து பல்வேறு மீட்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், பாதிப்பு ஏற்பட்ட மாவட்டங்கள் மெதுமெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. இதை அடுத்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடந்த வாரம் அறிவித்தார்.
இந்த நிலையில் மழை வெள்ளத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினர், ஆடு மாடு போன்ற கால்நடைகள் மற்றும் வீடுகளை இழந்த குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (டிச.25) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மழையால் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு, தலா 5 இலட்சம் ரூபாயும், கால்நடைகளை இழந்தவர்களுக்கும், வீடுகளை இழந்தவர்களுக்கும் 10 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகையை வழங்கினார். இந்த நிலையில் திருநெல்வேலியில் மழை வெள்ளத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினர், ஆடு, மாடு போன்ற கால்நடைகள் மற்றும் வீடுகளை இழந்த குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டது குறித்து, திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், மழை வெள்ளத்தில் நேற்று வரை 13 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் தெரிவித்து வந்த நிலையில், மொத்தம் 16 பேர் நெல்லை வெள்ளத்தில் உயிரிழந்திருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் 67 மாடுகள், 504 ஆடுகள், 135 கன்றுகள், 28 ஆயிரத்து 392 கோழிகள் மழை வெள்ளத்தால் உயிரிழந்திருப்பதாகவும், ஆயிரத்து 64 வீடுகள் மழை வெள்ளத்தால் இடிந்து விழுந்து சேதமடைந்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதற்காக மொத்தம் 2 கோடி 87 லட்சம் ரூபாய் நிவாரண தொகையாக ஒதுக்கப்பட்ட நிலையில், இன்று (டிச.25) முதல் கட்டமாக 21 நபர்களுக்கு 58 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டு உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:20 ஆண்டு உழைப்பு ஒரே நாளில் வீண்.. 50 லட்சம் மொத்தமாக போச்சு - கண்ணீர் சிந்தும் நெல்லை வியாபாரி!