தமிழ்நாடு காவல் துறையில் காலியாக உள்ள இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க தமிழ்நாடு முழுவதும் இளைஞர்கள் ஆர்வமாக உள்ள நிலையில், நெல்லை மாநகர காவல் துறை, அரோரா, அன்னை தெரசா பொது நல அறக்கட்டளைகள் சார்பில் ஏழ்மையான நிலையில் காவலர் தேர்வில் ஆர்வம் கொண்ட மாணவ, மாணவிகள், திருநங்கைகளை தேர்ந்தெடுத்து காவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கும் பயிலரங்கம் இன்று தொடங்கப்பட்டது.
இந்த பயிலரங்கத்தை மாநகர காவல் துணை ஆணையர் அர்ஜூன் சரவணன் தொடக்கி வைத்து, மாணவர்களுக்கு புத்தகத்தை பரிசாக வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், திருநெல்வேலி மாநகர இளைஞர்களின் எதிர்காலம் சிறப்பானதாக அமைய மாநகர காவல் துறை எப்போதும் துணை நிற்கும். காவலர் தேர்விற்கு நீங்கள் தயார் செய்ய அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்கிறோம். நன்றாக படிப்பது மட்டுமே உங்களது பணி. இரண்டு மாத காலத்திற்கு உங்கள் விளையாட்டு, நட்பு, காதல், பகை அனைத்தையும் ஒத்தி வையுங்கள். தேர்வில் மட்டும் கவனம் செலுத்துங்கள். புத்திசாலிகள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்துகின்றனர்.