திருநெல்வேலியில் மாநகர காவல் துறை துணை ஆணையராக இருந்த அர்ஜுன் சரவணன், தூத்துக்குடி மாவட்டம் பேராவூரணி காவலர் பயிற்சி பள்ளியின் முதல்வராக சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாநகர காவல் துறையில் இதுவரை பல்வேறு துணை ஆணையர்கள் பணிபுரிந்து சென்றாலும்கூட அர்ஜுன் சரவணன் மக்களின் மனத்தில் நீங்கா இடம்பிடிக்கும் வகையில் தனது பணியை வெளிப்படுத்தினார்.
அதாவது துணை ஆணையராக இருந்தாலும்கூட எளிமையான முறையில் மக்களுடன் பழகி காவல் துறை மூலம் பல்வேறு உதவிகளை பொதுமக்களுக்குச் செய்துவந்தார்.
காவல் துணை ஆணையரை வழியனுப்பிய மக்கள் குறிப்பாக ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் இளைஞர்களை ஒன்றிணைத்து 'நமது நெல்லை பாதுகாப்பான நெல்லை' என்ற தலைப்பில் பல்வேறு விழிப்புணர்வுகளை பொதுமக்களிடம் ஏற்படுத்திவந்தார். கரோனா காலத்தில் சமூக வலைதளம் மூலம் தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து பொதுமக்களுக்கு ஏராளமான உதவிகளைச் செய்துவந்தார்.
அதேபோல் போட்டித் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு வாழ்த்துச் சொல்வது அவர்களுக்கான ஆலோசனைகளை வழங்க சிறப்புக் கூட்டங்களை ஏற்பாடு செய்வது எனப் பல்வேறு பொது நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்திவந்தார். இதுபோன்ற பணிகளால் திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் பதவியில் அர்ஜுன் சரவணன் தனக்கென முத்திரை பதித்தார்.
இந்த நிலையில், அர்ஜுன் சரவணன் நேற்று (பிப். 22) தனது பணியை புதிய துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரீனிவாசனிடம் ஒப்படைத்தார். இதையடுத்து மாநகர பொதுமக்கள் சார்பில் அவருக்குப் பிரிவு உபசார விழா நடைபெற்றது. அப்போது பொதுமக்கள் அர்ஜுன் சரவணனின் பணியை பாராட்டி அவருக்கு கிரீடம் சூட்டி மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்ட துணை ஆணையர், திருநெல்வேலி மக்களின் இந்த அன்பு நெகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருப்பதாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 2 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம்: கவிஞர் வரவர ராவுக்குப் பிணை!