திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று (நவ.30) நடைபெற்றது. இதில் துணை மேயர் ராஜு, ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி, மண்டல தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் பாளையங்கோட்டையில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு சேவை மையத்திற்கு கருணாநிதி பெயர் சூட்டுவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது.
மேலும் கூட்டத்தில் மேயர் சரவணன் பேசும்போது, அரியநாயகிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பிறகு நெல்லை மாநகராட்சியில் குடிநீர் பிரச்சினை முழுமையாக சரி செய்யப்படும் என்றார்.
தச்சநல்லூர் மண்டல தலைவர் ரேவதி பேசும் போது, தனது மண்டலத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாதி பெயர்கள் தெருக்களுக்கு சூட்டப்பட்டுள்ளது அவற்றை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதற்கு பதில் அளித்த சிவ கிருஷ்ணமூர்த்தி, இது பிரச்சினைக்குரிய விஷயம் அரசு வழிகாட்டுதல்படி தான் தெருக்களின் பெயர்களை மாற்ற முடியும், மன்ற கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்க முடியாது என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து 55 வது வார்டு உறுப்பினர் முத்து சுப்பிரமணியன் பேசும்போது, குடிநீர் குழாய் அமைப்பது உட்பட பல்வேறு திட்டங்கள் முறையான திட்டமிடல் இல்லாமல் நிறைவேற்றப்படுவதால் மக்கள் அவதி அடைகின்றனர். எனவே உரிய திட்டமிடலோடு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
மேலும் அவர் பேசும்போது பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தின் மாடியில் மாணவர்கள் கற்றல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக மன்ற கூட்டத்தில் உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டதா என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி, பொதுவாக மாநகராட்சிக்கு வருவாய் வரக்கூடிய விஷயங்களில் வரவு செலவு செய்வதில் தான் மாமன்ற உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால் கற்றல் மையம் அமைக்கப்பட்டுள்ள இடம் காலியாக இருந்தது கடைகள் எதுவும் இல்லை, வருமானம் வரவில்லை.