தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"அடிப்படை தேவையை பூர்த்தி செய்யாத நெல்லை மாநகராட்சிக்கு நன்றி" - திமுக கவுன்சிலர் போஸ்டரால் பரபரப்பு! - Nellai news

திருநெல்வேலியில், மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யாத மாநகராட்சி ஆணையருக்கு நன்றி தெரிவித்து 7வது வார்டு திமுக கவுன்சிலர் ஒட்டியுள்ள போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக உட்கட்சி பூசலில் ஐஏஎஸ் அதிகாரியை வம்புக்கு இழுக்கிறதா நெல்லை மாநகராட்சி?
திமுக உட்கட்சி பூசலில் ஐஏஎஸ் அதிகாரியை வம்புக்கு இழுக்கிறதா நெல்லை மாநகராட்சி?

By

Published : May 6, 2023, 12:21 PM IST

திருநெல்வேலி:தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிமுக ஆட்சியில் தேர்தல் நடத்தப்படாமல் இருந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில், மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது. பெரும்பாலான நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிளும் ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே வசப்படுத்தின.

இந்த நிலையில், பதவியேற்று சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில், பெரும்பாலான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் திமுக உறுப்பினர்கள் இடையே உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக நெல்லை மாநகராட்சி அது வெட்ட வெளிச்சமாக தலைமை வரை சென்று அம்பலமானது.

மொத்தம் 55 வார்டுகளைக் கொண்ட நெல்லை மாநகராட்சியில், 6வது வார்டு உறுப்பினர் சரவணன் மேயராகவும், 1வது வார்டு உறுப்பினர் ராஜு துணை மேயராகவும் இருந்து வருகின்றனர். அதேபோல், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும், நெல்லை திமுக மத்திய மாவட்டச் செயலாளருமான அப்துல் வகாப் சிபாரிசில்தான் தற்போது மேயராக உள்ள சரவணனுக்கு கவுன்சிலர் சீட் கிடைத்ததாக கூறப்படுகிறது.

மேலும், கட்சி தலைமை சரவணனை மேயர் வேட்பாளராக அறிவித்த பிறகு, தனக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகளை மேயர் சரவணனுக்கு மாவட்டச் செயலாளர் அப்துல் வகாப் விதித்ததாக தெரிகிறது. அதன்படி ஓரிரு மாதங்கள் மேயர் சரவணன் மாவட்டச் செயலாளர் பேச்சை கேட்டு நடந்ததாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

பின்னர், தனி வழியில் பயணிக்க தொடங்கினார் எனவும், இதனால் ஆத்திரமடைந்த மாவட்டச் செயலாளர் மேயருக்கு எதிராக சில செயல்களை மேற்கொண்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அதன்படி மாவட்டச் செயலாளர் ஆதரவு கவுன்சிலர்கள், தொடர்ச்சியாக மன்ற கூட்டங்களில் பிரச்னையை எழுப்பி, மேயர் சில திமுக நிர்வாகிகளை கையில் வைத்துக் கொண்டு ஒப்பந்ததாரர்களுடன் தனது அறையில் வைத்து கமிஷன் கேட்பதாக குற்றம் சாட்டினர்.

அதேபோல் துணை மேயர் உள்பட மாவட்டச் செயலாளரின் ஆதரவு கவுன்சிலர்கள் 30க்கும் மேற்பட்டோர், திருச்சியில் அமைச்சர் நேருவை சந்தித்து மேயரை மாற்றும் படி கோரிக்கை வைத்தனர். அதேநேரம் மேயர் மற்றும் மாவட்டச் செயலாளர் இருவரும் கமிஷனை பங்கு பிரிப்பதில்தான் அடித்துக் கொள்வதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

சமீபத்தில் நடைபெற்ற மன்ற கூட்டத்தில், கூட்டத்தை நடத்த விடாமல் பெரும்பான்மை திமுக கவுன்சிலர்கள் தகராறில் ஈடுபட்டனர். அதேபோல் மேயர் சரவணன், மாநகராட்சி ஆணையர் சிவ சப்பிரமணியத்திடமும் மோதல் போக்கை கடைபிடித்து வருவதாக கூறப்படுகிறது. ஏனென்றால், மேயரின் நடவடிக்கையை பிடிக்காத ஆணையர் ஆய்வுப் பணிகள் உள்பட பல்வேறு விஷயங்களில் தன்னிச்சையாக செயல்படுவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது. எனவே, மேயர் ஆதரவு கவுன்சிலர்கள் ஆணையருக்கு எதிராக மன்ற கூட்டத்தில் முழக்கமிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மேயரின் ஆதரவு கவுன்சிலராக கருதப்படும் 7வது வார்டைச் சேர்ந்த கவுன்சிலர் இந்திரா மணி, தனது வார்டு பகுதியில் "அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யாத நெல்லை மாநகராட்சிக்கு நன்றி" என போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார். அந்த போஸ்டரில், ”7வது வார்டு மக்களை வஞ்சிக்கும் நெல்லை மாநகராட்சி ஆணையருக்கு நன்றி. சாலை வசதி செய்து தர கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு நன்றி. தெருக்களில் பாலங்கள் போட்டு தரச் சொல்லியும், அதை போடாமல் இருக்கும் மாநகராட்சி ஆணையருக்கு நன்றி. தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யாமல் இருப்பதற்கு நன்றி. சொந்த ஊரில் அகதிகளாக எந்த வித அடிப்படை தேவையும் இல்லாமல் எங்களை வாழ வைக்கும், எங்களுடைய எந்த ஒரு கோரிக்கையும், எங்களின் கஷ்டங்களையும் கண்டு கொள்ளாமல் இருக்கும் நெல்லை மாநகராட்சி நிர்வாகத்திற்கும், மாநகராட்சி ஆணையாளருக்கும் மிக்க நன்றி..! ஏக்கத்துடன் எம்கேபி நகர் ஊர் பொதுமக்கள்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த போஸ்டர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது. மேலும், 7வது வார்டுக்கு உட்பட்ட காமராஜர் நகரில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப் பள்ளியில் கட்டடங்கள் ஆபத்தாக இருப்பதாகவும், அது குறித்து பலமுறை ஆணையருக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தனியாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

அதேநேரம், இதே 7வது வார்டு கவுன்சிலர் இந்திரா மணி தான் சில மாதங்களுக்கு முன்பு மேயர் சரவணனுக்கு எதிராக, தனது கணவருடன் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் கருப்பு சேலை அணிந்தபடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் நெல்லை மாநகராட்சியில் பெண் கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்க மறுப்பதாக குற்றம் சாட்டினார். ஆனால், அடுத்த சில நாட்களில் மேயருக்கு ஆதரவாக இந்திரா மாறினார் எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான், ஆணையரின் நடவடிக்கையை பிடிக்காத மேயர், கவுன்சிலர் இந்திரா மணி மூலம் அவருக்கு எதிராக போஸ்டர் ஒட்டியதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே, சில தினங்களுக்கு முன்பு அதிமுக மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா சார்பில் ‘ஊழல் மாநகராட்சியை கலைத்திடு’ என்று போஸ்டர் ஒட்டியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சாதி பெயரைச் சொல்லி திட்டியதாக நெல்லை மேயர் மீது புகார்.. தொடரும் திமுக உட்கட்சி பூசல்

ABOUT THE AUTHOR

...view details