திருநெல்வேலி:தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்று, மே 2ஆம் தேதி முடிவுகள் வெளியாகின. வாக்குப் பதிவு மையத்தை தயார் செய்வது, வாக்கு எண்ணிக்கை, பயணங்கள், அலுவலக செலவுகள், அலுவலர்களுக்கான ஊதியம் என சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவதற்காக 744 கோடி ரூபாய் செலவானதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில், தேர்தலுக்கு 617 கோடியே 75 லட்சம் ரூபாயும் கோடியும், தொலைபேசி, எரிபொருள், வாடகை வாகனம், விளம்பரம் உள்ளிட்ட செலவினமாக 126 கோடியே 18 லட்சம் ரூபாயும் செலவிடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், GIS தொழில்நுட்பத்தின் உதவியுடன், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளிலுள்ள 1,924 வாக்குச் சாவடிகளும் முறையாக கண்காணிக்கப்பட்டது.
இதில், வாக்காளர்கள் முதல் தேர்தலில் பணியாற்றிய தேர்தல் அலுவலர்கள் வரை அனைவரும் பயன்பெறும் வகையில், ”வாக்குச்சாவடி வழிகாட்டி” என்ற இணையதள அமைப்பைத் திருநெல்வேலி மாவட்ட தேசிய தகவலியல் மையத்தின் தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கியது.
இதன் மூலம் அனைத்து வாக்காளர்களும் தங்கள் இருப்பிடத்திலிருந்து தங்களுக்குரிய வாக்குச் சாவடிகளுக்குச் செல்ல வேண்டிய வழிகளைத் தெளிவாகப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். மேலும் 360 கோண பரிணாமத்தில் அனைத்து வாக்குச் சாவடிகளின் உட்புறத் தோற்றத்தையும் இந்த இணையதளம் வழியாகவே எளிதாகப் பார்த்துக் கொள்ளலாம்.