தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லையில் வெள்ளத்தால் சேதமடைந்த முக்கிய பாலம்..போக்குவரத்தில் மாற்றம் - நெல்லை வண்ணாப்பேட்டை ஆற்றுப்பாலம்

Tirunelveli Flood: நெல்லை வண்ணாரப்பேட்டையில் ஆற்றுப்பாலம் கடுமையாகச் சேதமடைந்ததால், நான்கு வழிச்சாலை வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

tirunelveli city traffic changes because of road damage due to heavy rain flood
நெல்லையில் கனமழையால் போக்குவரத்து மாற்றம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 19, 2023, 2:46 PM IST

நெல்லை: நெல்லையில் கடந்த இரண்டு நாட்கள் கொட்டித்தீர்த்த கனமழையால் மாநகர் மற்றும் புறநகரில் பல முக்கிய போக்குவரத்து சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஆறு, குளம், ஏரி போன்ற நீர்நிலைகளிலிருந்து வெளியேறிய தண்ணீரால் சாலைகள், மேம்பாலங்கள், தரைப்பாலங்கள் குடிநீர் குழாய்கள் என பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

சாலைகள் பல இடங்களில் சேதமடைந்துள்ளதால் தற்போது வரை, நெல்லையில் போக்குவரத்து சீராகவில்லை. நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் சுற்றி முழுவதும் தண்ணீர் நிற்பதால் ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. நெல்லைப் போக்குவரத்துக் கழகத்தில் நாள்தோறும் 5 ஆயிரத்து 60 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் இன்று (டிச.19) 50 சதவீதம் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், நெல்லை வண்ணாரப்பேட்டையில் இருந்து தச்சநல்லூர் வழியாக மதுரை செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தாமிரபரணி ஆற்றுப்பாலம், நேற்று ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் தண்ணீரில் மூழ்கியது. நேற்று சுமார் ஒரு லட்சம் கன அடி வரை ஆற்றில் தண்ணீர் சென்றதால் பாலத்தை மூழ்கியபடி தண்ணீர் சென்றது. இதனிடையே, கனமழை ஓய்ந்ததைத் தொடர்ந்து, தற்போது ஆற்றில் தண்ணீர் குறைந்திருந்தாலும் கூட நேற்று ஏற்பட்ட வெள்ளத்தால் பாலம் பயங்கர சேதமாகி உள்ளது.

பாலத்தின் விளிம்புகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், அந்த வழியாக வாகனங்களை இயக்க முடியாத நிலை உள்ளது. இதையடுத்து, வண்ணாரப்பேட்டையில் இருந்து தச்சநல்லூர் வழியாக மதுரை செல்லும் சாலை மூடப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக, நெல்லையில் இருந்து மதுரை செல்லும் வாகனங்கள் நான்கு வழிச்சாலை வழியாக மாற்றி விடப்பட்டுள்ளது.

தொடர்ந்து வண்ணாரப்பேட்டை அருகே போலீசார் தடுப்புகள் அமைத்து அந்த வழியாக வாகனங்கள் செல்லாதபடி கண்காணித்து வருகிறார்கள். இந்த சாலை மாநகரின் முக்கிய சாலையாகும். எனவே, அங்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:"குழந்தைகளுக்காவது உணவு கொடுங்கள்" ரயிலில் சிக்கிய 500 பேர் தவிப்பு.. மீட்பு நிலவரம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details