திருநெல்வேலி :பாண்டவர்களின் பன்னிரெண்டு ஆண்டு கால வனவாசம் முடிந்த நேரம். அடுத்து ஒரு வருடம் அடையாளம் துறந்த அஞ்ஞாத வாழ்வு வேண்டும். அர்ச்சுனன் தவிர்த்த நால்வர் தங்களுக்கு விருப்பமான தொழிலைத் தேர்வு செய்து தலைமறைவு வாழ்க்கைக்குத் தயாராக, அவர் மட்டும் பாரதப் போரின் லட்சியம் தவறாதிருக்க தன்னைத் திருநங்கையாக்கிக் கொண்டார். அழகு துறந்த அர்ச்சுனனின் அந்த முடிவுக்கு நிகராக, தன் பெண்மையின் அடையாளம் துறந்து, சாதித்து வருகிறார் திருநெல்வேலி பாலபாக்கியா நகரில் உள்ள திருநங்கை ஒருவர். பாலின அறுவை சிசிச்சை செய்து பெண்ணாய் மாறியிருந்தும், தன்னைப் பெண்ணாய் வெளிப்படுத்த பெண்கள் போல இவர் ஆடையணியாமல், ஆண் உடையிலேயே வலம் வருகிறார்.
"விழும்போது ஒரு விதையா விழுந்து, வளரும் போது வேற செடியா வளருற விதி எனக்கு. எல்லா திருநங்கைகள் மாதிரியும் பதின்ம வயசுல எனக்குள்ள வித்தியாசமான மாற்றத்தை உணர, உலகமே இருண்டு போனதா நினைச்சேன். இனி இது தான் வாழ்க்கைனு தெரிஞ்சதுக்கு பிறகு, என்னோட பெண் தன்மையை ஆடையில் அடையாளப்படுத்தக் கூடாதுனு முடிவு செஞ்சேன். அதனால தான் என் பெயரையும் இருபால் பெயரா வச்சிருக்கேன்" தன் பெயர் காரணத்தை விளக்குகிறார் திருநங்கையான முத்துமீனாட்சி.
பாலின மாற்றத்தை உணர்ந்த பிறகு அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறிய முத்துமீனாட்சி, அதுவரை உடுத்தி வந்த ஆண் உடையிலேயே திருநங்கைகள் சங்கமிக்கும் கூவாகம் கூத்தாண்டவர் திருவிழாவிற்கு சென்றிருக்கிறார். அங்கு சக திருநங்கைகளே இவரது தோற்றத்தை ஏற்றுக் கொள்ளாமல், இவரது ஆடைகுறித்து கேலி செய்யதிருக்கிறார்கள். அப்போதிருந்து தொடங்கியிருக்கிறது முத்துமீனாட்சியின் அடையாள ஆடை துறப்பு தீவிரம். பெண்மையின் அடையாளம் அவளுடுத்தும் ஆடையில் இல்லை என உணர்ந்தவரை, அள்ளி அரவணைத்துக் கொண்டது பரதக் கலை. அதனை முத்துமீனாட்சிக்கு தெளிவுற கற்பித்திருக்கிறார், குரு ஸ்ரீமதி ராஜேஸ்வரி சுந்தர்ராமன்.
எனக்குள் நிகழ்ந்த மனப்போராட்டங்களுக்கு எல்லாம் நாட்டியம் தான் ஆறுலாக இருந்தது. 16 வயதில் நாட்டியம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். எனக்கு முதலில் நாட்டியம் கற்றுக் கொடுத்தது குரு ஸ்ரீமதி ராஜேஸ்வரி சுந்தர்ராமன். பிறகு, திருநெல்வேலி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் குருவாக இருந்தவர் குரு ஸ்ரீ மதி செல்வமுத்துகுமாரி. இவர்கள் இருவரும் என் இரு கண்கள் எனக் குருவைப் பற்றி பேசும் போது நன்றியுணர்ச்சி இழையோடும் வார்த்தைகள். என் மனப்போராட்டங்களுக்கு எல்லாம் நாட்டியம் நல்ல வடிகாலாக இருந்தது, இருக்கிறது. நானாடும் நாட்டியம் என் பெண்மை உணர்வுகளுக்கும், நளினத்திற்கும், கலை ஆர்வத்திற்கு கிடைத்த விருந்தாக உணர்கிறேன் என்னும் போது உற்சாக ஆடையுடுத்திக் கொள்கிறது.