திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் நூற்றாண்டு பழமைவாய்ந்த மத்திய சிறை உள்ளது. இங்கு பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்ற மற்றும் விசாரணைக் கைதிகள் சுமார் 1,300 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை கண்காணிக்க சுமார் 150 சிறை காவலர்கள் மற்றும் அலுவலர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணிபுரிந்து வருகின்றனர்
இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த ஜீவா என்ற கைதி, பிணையை மீறிய காரணத்துக்காக காவல்துறையினர் அவரை மீண்டும் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு கொண்டு வந்தனர். அங்கு தனக்கு மஞ்சள் காமாலை இருப்பதாக கூறியதால், காவலர்கள் அவரை பாளையங்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது ஜீவா நூதனமாக தப்பி ஓடி விட்டார்.அதேபோல் நெல்லை மாவட்டம் ராதாபுரம் மதக நேரியைச் சேர்ந்த டேவிட் என்ற ஆயுள் தண்டனை சிறை கைதி, சிறை அங்காடியில் நன்னடத்தை காரணமாக டீ மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 27 ஆம் தேதி அங்காடி பணியில் இருந்த தலைமைக்காவலர் மாரியப்பனின் இருசக்கர வாகனத்தை பயன்படுத்தி தப்பி ஓடியுள்ளார்.
மேலும் நெல்லை சீவலப்பேரியைச் சேர்ந்த கொலை வழக்கு கைதி சீனித்துரை, பரோலில் வெளியே சென்ற நிலையில் நேற்றுடன் அவருக்கு பரோல் முடிந்தது. நேற்று மாலைக்குள் அவர் சிறைக்கு திரும்ப இருந்த நிலையில், திடீரென தலைமறைவானதால் காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர்.