திருநெல்வேலி: முன்னீர்பள்ளம் அருகே அடைமதிப்பான்குளம் கிராமத்தில் வெங்கடேஸ்வரா என்ற பெயரில் இயங்கி வரும் கல்குவாரியில், நேற்று (மே 14) நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் மிகப்பெரிய பாறை உருண்டு விழுந்ததில் விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் பள்ளத்தில் சிக்கிய ஹிட்டாச்சி ஆபரேட்டர்கள் முருகன், விஜய் ஆகியோர் மீட்புப் படையினரால் உயிருடன் இன்று (மே.15) மீட்கப்பட்டனர். மேலும் 4 பேரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சுமார் 300 அடி ஆழம் கொண்ட குவாரியில், வெடிகளால் தகர்க்கப்பட்ட கற்களை ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் லாரிகளில் ஏற்றும் பணிகள் நடைபெற்ற போது, நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் சரிந்து விழுந்ததால், அங்கு பணியில் இருந்த லாரி டிரைவர்கள் ராஜேந்திரன், செல்வகுமார், ஹிட்டாச்சி வாகன ஆபரேட்டர்கள் செல்வம், முருகன், விஜய் மற்றும் லாரி கிளீனர் முருகன் ஆகிய 6 பேர், கற்களின் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புப்படை வீரர்கள் மற்றும் காவல் துறையினர் விரைந்து வந்து மீட்புப் பணியை துரிதப்படுத்தினர். கடும் போராட்டத்திற்குப் பிறகு ஆறு பேரில் விஜய் மற்றும் முருகன் ஆகிய இருவர் மட்டும் இன்று (மே 15) காலை உயிருடன் மீட்டனர். இருப்பினும், சுற்றி உள்ள பாறைகளில் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டு வருவதால் கூடுதலாக வீரர்களை களமிறக்கி மீதமுள்ள நான்கு பேரை மீட்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.
போதிய மீட்புக்கருவிகளும் இல்லாததால் தற்காலிகமாக மீட்புப்பணிகள் நிறுத்தப்பட்டன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் இருவரும் அங்கேயே முகாமிட்டு மீட்புப் பணிகளை பார்வையிட்டு வருகின்றனர். இந்த நிலையில் நான்கு பேரில் செல்வக்குமார் தவிர, மீதமுள்ள மூன்று பேரும் நேற்று இரவே இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.