திருநெல்வேலி:நெல்லை மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடிக்க, மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி, மாநகராட்சி ஊழியர்கள் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடித்து மாநகராட்சி பூங்காக்கள் மற்றும் மாநகராட்சிக்குச் சொந்தமான இடங்களில் அடைத்து வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், பிடிப்பட்ட மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், நெல்லை சந்திப்பு மேகலிங்கபுரம் பகுதியில் சாலைகளில் சுற்றித் திரிந்த 10க்கும் மேற்பட்ட மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்துச் சென்று, அருகில் உள்ள மாநகராட்சி பூங்காவில் அடைத்து வைத்தனர்.
இதனைக் கண்ட மாடுகளின் உரிமையாளர்கள், மாநகராட்சி ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வீட்டின் முன்பு உள்ள நந்தவனத்தில் இருந்த மாடுகளை பிடித்துள்ளதாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே, சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளுக்கு மாநகராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனை மாநகராட்சி அலுவலகத்தில் சென்று செலுத்தி விட்டு, ரசீது கொண்டு வந்தால் மட்டுமே மாட்டை வெளியே விடுவோம் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.