தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோர் காவல் சிறையில் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு எதிர்க்கட்சிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்தன. மேலும், வணிகர் சங்கம் தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தியது. இறந்தவர்களின் உடலுக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது.
மாஜிஸ்திரேட்டு ஆய்வுக்குப் பின் நேற்றிரவு (ஜூன்-24) 8 மணியளவில் தொடங்கிய உடற்கூறாய்வு, 11.35 மணிக்கு நிறைவு பெற்றது. மாஜிஸ்திரேட்டு முன்னிலையில், நெல்லை அரசு மருத்துவர்கள் தலைமையில் மருத்துவர் குழு நடத்திய உடற்கூறாய்வை வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, உயிரிழந்த ஜெயராஜின் மனைவி செல்வராணி, அவரது மகள்கள் பெர்சி, பியூலா, அபிஷா மற்றும் உறவினர்கள் 9 பேர் விசாரணைக்கு சென்றனர். சுமார் 5 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.