திருநெல்வேலி:தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை துணைத்தலைவரும் மூன்று காவலர்களையும் அரசு பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்புப்பணியில் இருந்தபோது துப்பாக்கிச்சூடு நடத்த காவல் ஆய்வாளராக இருந்த திருமலை உத்தரவிட்டார். அதில் கந்தையா மற்றும் தமிழரசன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர் என அருணா ஜெகதீசன் ஒரு நபர் ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை எதிரொலியாக டிஜிபி சைலேந்திரபாபுவின் உத்தரவுப்படி அப்போதைய தூத்துக்குடி - புதுக்கோட்டை காவல் ஆய்வாளரும் தற்போதைய நெல்லை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி ஆணையராகவும் உள்ள திருமலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஆணைய அறிக்கையில் போலீஸ்காரர் சுடலைக்கண்ணு தனி ஆளாக அபாயகரமான துப்பாக்கியைக் கொண்டு மொத்தம் 17 ரவுண்டு துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சுடலைக்கண்ணு கிரேடு 1 காவலராக நெல்லை மாவட்டம், திசையன்விளை காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டுப்பலர் உயிரிழக்க காரணமாக இருந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.