தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் நினைவு தினம் திருநெல்வேலி:மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் தாமிரபரணி நதியில் உயிர் நீத்த நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை தாமிரபரணி நதியில் மலர் வளையம் வைத்து திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்; ''தமிழ்நாடு முழுவதும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை இன்னும் கேள்விக்குறியாகத் தான் உள்ளது. அரசு குறைந்தபட்ச ஊதியமாக 425 ரூபாயை நிர்ணயம் செய்து அறிக்கை வெளியிட்ட நிலையிலும் தேயிலைத்தோட்ட உரிமையாளர்கள் அதற்கு தடை ஆணை பெற்றுள்ளனர். இந்த வழக்கை தமிழ்நாடுஅரசு விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும், நீதிமன்றத்தில் காந்தி மற்றும் திருவள்ளுவர் உருவப்படம் அல்லது சிலை தவிர வேறு படங்கள் சிலைகளுக்கு அனுமதி கிடையாது என உயர் நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. புதிய இந்தியாவை கட்டமைத்தவர் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்தவர் என்பதன் காரணமாக அம்பேத்கர் படம் நீதிமன்றத்தில் வைக்கப்பட்டிருந்தது. அம்பேத்கர் படத்தை அகற்ற வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது.
இந்த விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் விரைவில் போராட்டம் நடத்தப்படும். தமிழ்நாட்டில் சமூகப் பதற்றம் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தும் உள்நோக்கத்தில் என்ஐஏ சோதனை என்ற முறையை பாஜக கையாண்டு வருகிறது. நெல்லையில் எஸ்.டி.பி.ஐ மாநிலத் தலைவர் முபாரக் இல்லத்தில் என்ஐஏ சோதனையை நடத்தி அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர். என்ஐஏ அமைப்பை ஏவி சோதனை என்ற பெயரால் பதற்றத்தை ஏற்படுத்துவதால் தமிழ்நாடு பயங்கரவாதிகளுடன் இணக்கமாக இருப்பதைப்போல், காட்டுவதற்கே பாஜக என்ஐஏ என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது.
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பு செய்வதில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முக்கியப் பங்காக இருப்பதால் பிரதமர் தமிழ்நாடு முதலமைச்சர் மீது மிகவும் கோபத்தில் உள்ளார். இந்தியா என்ற கூட்டமைப்பு அமைவதற்கு ஸ்டாலின் மிக முக்கிய காரணம் என்பதால் பிரதமர் சமீப காலங்களாக நிகழ்த்தும் உரைகளில் திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை கண்டித்து பேசி வருகிறார்.
பாஜக திமுக அரசைக் கண்டித்து நடத்தும் போராட்டம் வேடிக்கையாக உள்ளது. மணிப்பூர் சம்பவத்தை திசை திருப்பும் நோக்கிலும் இந்தியா கூட்டணி வலுப் பெற்றிடக்கூடாது என்ற பதற்றத்திலும் பாஜக போராட்டம் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஆந்திராவின் மந்திராலயம் பகுதியில் 108 அடி உயர ராமர் சிலை - அமைச்சர் அமித் ஷா அடிக்கல்!