தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா காலத்திலும் கலைக்கு ஓய்வில்லை... 2 ஆயிரம் ஓவியங்கள் தீட்டிய நெல்லை மாணவர்கள்! - ஓவிய ஆசிரியர் கணேசன் ஸ்மார்ட் ஓவிய பயிற்சி

தொலைக்காட்சி, செல்போன் என வீணாக தொழில்நுட்ப சாதனங்களில் பொழுதைக் கழிக்கவிடாமல், குழந்தைகளின் கைகளின் வண்ணங்கள் பூசும் பிரஷ்ஷைக் கொடுத்து வண்ணம் தீட்டியிருக்கிறார் ஓவிய ஆசிரியர் கணேசன்.

ரியானா
ரியானா

By

Published : May 6, 2020, 3:07 PM IST

ஒவ்வொரு கல்வியாண்டின் இறுதியிலும் தேர்வுகள், விடுமுறை என வழக்கமான கால அட்டவணையிலே நகரும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் நாள்கள். ஆனால், இம்முறை, அதற்கு இடம்கொடுக்காமல், கரோனா பெருந்தொற்று அனைவரையும் முடக்கியது. இருப்பினும், கரோனா நெருக்கடி கலைஞர்களைக் கட்டுப்படுத்த முடியாது என நிருபித்திருக்கிறார்கள், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த குட்டி ஓவியக் கலைஞர்கள். தொலைக்காட்சி, செல்போன் என வீணாக தொழில்நுட்பச் சாதனங்களில் பொழுதைக் கழிக்கவிடாமல், குழந்தைகளின் கைகளின் வண்ணங்கள் பூசும் பிரஷ்ஷைக் கொடுத்து வழிகாட்டியிருக்கிறார், ஓவிய ஆசிரியர் கணேசன்.

ஓவிய ஆசிரியர் கணேசன்

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகே தெற்குபஜார் பகுதியைச் சேர்ந்த கணேசன், அரசுப் பள்ளி ஓவிய ஆசிரியராகப் பணிபுரிகிறார். இவர் 10 வருடங்களாக ஓவியத் துறையில் கலைப் பணியாற்றிவருகிறார். தனது கலைக் கூடம் வாயிலாக, 30க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஓவியங்கள் வரையக் கற்றுக் கொடுத்துவருகிறார். இச்சூழலில், கரோனா ஊரடங்கு அவரின் ஓவிய வகுப்புகளுக்கு இடைக்காலமாக தடையை ஏற்படுத்தியது.

ஓவியம்

மற்ற மாணவர்களைப் போல, தன்னிடம் ஓவியம் பயிலும் மாணவர்களும், இந்த விடுமுறையைப் பயனற்றதாக ஆக்கிவிடக் கூடாது என்பதற்காக, ஸ்மார்ட் ஓவியப் பயிற்சியை முன்னெடுத்தார். தன்னிடம் ஓவியம் பயின்ற மாணவர்களின் பெற்றோர்களைத் தொடர்பு கொண்டு கலந்தாலோசித்தார்.

“ஊரடங்கு காலத்தை, எனது மாணவர்கள் பயனுள்ளதாகக் கழிக்க இந்த முயற்சியை மேற்கொண்டேன். இதற்காக, மாணவர்களின் பெற்றோருடைய தொலைபேசி எண்களை வாட்ஸ்அப் குழுவில் ஒன்றிணைத்து, நாள்தோறும் செயல் பயிற்சிகளை, காணொலிகள் மூலம் செய்து காண்பித்தேன். நான் ஓவியங்கள் வரைவதை, என் மகன் துணையோடு வீடியோ எடுத்து அக்குழுவில் பதிவிடுவேன்.

மாணவர்களின் ஓவியக் குவியல்

என்னுடைய காணொலிகளின் ஓவிய நுணுக்கங்களை மாணவர்கள் கூர்ந்து கவனித்து, அவரவர் வீடுகளிலே ஓவியங்கள் வரையத் தொடங்கிவிட்டனர். கரோனா விழிப்புணர்வு ஓவியத்தில் தொடங்கி, காபி பவுடர் மூலம் ஓவியம் தீட்டுவது, மர ஸ்கேலில் விவசாய விழிப்புணர்வு ஓவியம், சாக்பீஸில் தலைவர்களின் ஓவியம் என ஒவ்வொரு நாளும் மாணவர்களின் ஆர்வம் குறையாதவாறு ஓவியப் பயிற்சி அளித்து வருகிறேன். கடந்த நாள்களில், மாணவர்கள் அளித்த ஒத்துழைப்பின் பலனாக, அந்த ஓவியங்கள் கண்காட்சியாக உருவெடுத்துள்ளது, மனநிறைவாகவும் மகிழ்ச்சிகரமாகவும் இருக்கிறது” என்று கூறி நெகிழ்கிறார் ஓவிய ஆசிரியர் கணேசன்.

ஓவிய அனுபவம் குறித்து மாணவி ரியானா கூறும்போது, ”கரோனாவால் வீட்டிலிலேயே இருக்கிறோம். இப்போது, தொலைக்காட்சியில் நேரம் செலவளிக்காமல் ஓவியத்தில் கவனம் செலுத்தும் வகையில், ஓவிய ஆசிரியர் பயிற்சி கொடுக்கிறார். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு ஓவியம் என்பது எங்களுக்கு ஊக்கமளிக்கிறது. நானும் நன்றாக ஓவியம் தீட்டி வருகிறேன்” என்றார்.

ஊரடங்கில் வீட்டிலேயே ஓவியக் கண்காட்சி அமைத்த மாணவர்கள் குறித்த காணொலி

மாணவர்கள் வரைந்த ஓவியங்களை, அவரவர் வீடுகளில் மாணவர்களே கண்காட்சியாக வைத்து வீடியோ எடுத்து தனது நண்பர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர். இக்கண்காட்சியினை 30க்கும் மேற்பட்ட மாணவர்கள், 2,000க்கும் மேற்பட்ட ஓவியங்களுடன் காட்சிப்படுத்தியுள்ளனர். கரோனா தனிமையிலும், தங்களால் சாதிக்கமுடியும் என ஓவியங்களால் காட்சிப்படுத்தி அசத்திய மாணவர்களுக்கு பாராட்டுகள்!

இதையும் படிங்க:செருப்பு தைக்காமல் நாள்களை கடத்தலாம்...பசி இல்லாமல் வாழ்வை நகர்த்த முடியாது!

ABOUT THE AUTHOR

...view details