திருநெல்வேலி என்றதும் நம் நினைவுக்கு வருவது அல்வாவும், வற்றாத ஜீவநதி தாமிரபரணி ஆறும் தான். தமிழ்நாடு வரலாறு, இலக்கியத்தோடு தொடர்புடைய இந்த நதி மக்களின் பண்பாட்டு வகையில் மிகப்பெரிய பங்காற்றுகிறது. காலங்கள் போற்றும் தாமிரபரணியில் ரத்த வாடைகளும் வீசும், சந்தேக கொலைகளும், அரசியல் படுகொலைகளும் நிகழ்ந்திருப்பதை 20ஆம் நூற்றாண்டில் வாழும் எவராலும் மறக்கமுடியாது. திருநெல்வேலியின் வற்றாத ஜீவநதியாக இருக்கும் தாமிரபரணி ஆற்றால், பசுமையான சூழல் நிலவும்.
எங்கு பார்த்தாலும் பச்சை புல்வெளி போத்திய விவசாய நிலங்களில் இருந்து வரும் குளிர் காற்று இதயத்தை நனைத்து செல்லும். தாமிரபரணி ஆற்றில் உருண்டோடும் தண்ணீரின் சத்தங்கள் காற்றின் வழியே மெல்லிசை பாடும். திருநெல்வேலி மக்களின் வாழ்வில் முக்கிய தடம் பதித்துள்ள தாமிரபரணி ஆற்றில் தற்போது, மனித மலங்களின் வாடையும், மாமிச துர்நாற்றங்களும் வீசுகின்றன. குப்பையை சுமந்து செல்லும் கழிவோடையாக மாறியிருப்பது வேதனையளிக்கிறது.
நாகரிக வளர்ச்சியால், குப்பைகளின் நகரமாக திருநெல்வேலி காட்சியளிக்கிறது. குளம், குட்டை ஆற்றுப்பகுதிகளில் மலைபோல் குவியல் நிறைந்த குப்பைகளை கொட்டுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தண்ணீர் வளமும், விவசாய வளமும் பொய்த்து வருகிறது. பல லட்சம் மக்கள் கட்டிக்காத்த இந்த மண்ணை வளர்ச்சி என்ற பெயரில் கூறுபோட்டு விற்பனை செய்துக்கொண்டிருக்கிறோம். உயிரினங்கள் வாழ்வதற்கு ஆதாரமாய் விளங்குவது, மலைகள், காடுகள், செழிப்பான ஆறுகள், வளி, காற்று இவையனைத்தும் ஒன்றையொன்று சார்ந்து மனித இனத்தை காக்க பின்னி பிணைந்து கிடக்கிறது. உயிர்ப்போடு இருக்கும் இந்த இயற்கையை மனிதர்களாகிய நாம் அழித்துக்கொண்டிருக்கிறோம். நமக்கு நாமே வெட்டிக்கொள்ளும் சபக்குழிதான் என சுற்றுச் சூழலியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் மட்டும் நாள்தோறும் சுமார் 100 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இந்தக் குப்பைகளால் நீர்நிலைகள் பாதிக்கப்பட்டு வரும் சூழலில், நெல்லையில் மாநகராட்சி குப்பைக் கிடங்கால் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் ராமையன்பட்டி என்ற கிராமத்தில் உள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகின்றன. மத்திய அரசின் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் திடக்கழிவுகளை மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி அலுவலர்கள் முறைப்படி மறுசுழற்சி செய்ய வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
தற்போது பெரும்பாலான மாநகராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் முறையாக செயல்படுத்தப்படுவதில்லை. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்திலும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் முறையாக செயல்படாததால் மக்களிடம் சேகரிக்கப்படும் அனைத்து விதமான குப்பைகளும் ராமயன்பட்டி குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகின்றன. அதிலும், நெகிழி, ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி கழிவுகள் பல்வேறு விலங்கு கழிவுகள் நகரப்பகுதியில் சேகரிக்கப்பட்டு இங்கு வந்து கொட்டப்படுகின்றன. இந்தக் குப்பை கிடங்கு தொடங்கப்பட்ட காலத்தில், ராமையன்பட்டி பகுதியில் குறைந்த அளவே மக்கள்தொகை இருந்து வந்தது.
தற்போது, சுமார் 15 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். சுமார் 140 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் இந்தக் குப்பைக் கிடங்கில் இருந்து துர்நாற்றம் வீசுவதால், இப்பகுதி மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அடிக்கடி இந்தக் குப்பைக் கிடங்கில் ஏற்படும் தீ விபத்தினால் ஏற்படும் புகைமூட்டம், ஆஸ்துமா, மூச்சுத்திணறல், தொற்று நோய் பரவக்கூடிய அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. தீயணைப்புத்துறையினரால் அணைக்கப்படும் நெருப்பு மக்களின் வாழ்வில் அணையா புகையாக கனலாக எரிந்து கிடக்கிறது.