நெல்லை மாநகர காவல்துறை சார்பில் மக்களை தேடி 'மாநகர காவல்' என்ற தலைப்பில் பல்வேறு காவல் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, இன்று (ஜன.26) நெல்லை மாநகர் பகுதியில் வார்டு விழிப்புணர்வு காவலர் என்ற திட்டம் புதிதாக தொடங்கப்பட்டது.
பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற விழாவில், மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோர், துணை ஆணையர் சரவணன், உதவி ஆணையர் சதீஷ் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்று வார்டு விழிப்புணர்வு காவலர் திட்டம் தொடர்பான ஆலோசனைகளை காவலர்களுக்கு வழங்கினர்.
இத்திட்டப்படி, நெல்லை மாநகரம் முழுவதும் உள்ள 55 வார்டுகளுக்கும் தலைமை காவலர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பாதுகாவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஆணையர் தீபக் தாமோர் தலைக்கவசம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அதைத் தொடர்ந்து வார்டு விழிப்புணர்வு காவலர்கள் பங்கேற்ற வாகன பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
காவலர்களுக்கு தலைக்கவசம் வழங்கும் துணை ஆணையர் சரவணன் வார்டு பொறுப்பு அலுவலர்
இத்திட்டம் குறித்து துணை ஆணையர் சரவணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நெல்லை மாநகர் பகுதியில் வார்டு விழிப்புணர்வு காவல் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு தலைமை காவலர், சிறப்பு உதவி ஆய்வாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அந்த வார்டில் சட்டம், சட்ட விரோதமான செயல்கள் குறித்து கணக்கெடுத்து தங்களது அலுவலர்களுக்கு தகவல் தெரிவிப்பார்கள். வார்டு பொறுப்பு அலுவலராக அவர்கள் செயல்படுவார்கள்.
ரோந்து காவலர்களுக்கும் வார்டுகளுக்கும் என்ன வேறுபாடு?
இந்தத் திட்டம் மக்களுக்கும் காவல் துறைக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைக்கும் என்று நம்புகிறோம். ரோந்து காவலர்கள் ஒவ்வொரு நாளும் வேறு வேறு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஆனால், இந்த வார்டு காவலர்கள் சம்பந்தப்பட்ட வார்டு முழுவதும் அவர்கள் தான் பொறுப்பாக செயல்படுவார்கள். எனவே மக்களுக்கு பிரச்னை ஏற்படும் முன்பு அதை தீர்ப்பதற்கு முயற்சி செய்வார்கள் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:புதிய காவலர் குடியிருப்பு கட்டடத்தை முதலமைச்சர் திறந்துவைத்தார்