சாதி வெறி தாக்குதலை தடுக்கும் நடவடிக்கை என்ன? திருநெல்வேலி:சாதிய மோதல்களுக்காக ஒரு காலத்தில் பெரிதும் அறியப்பட்ட நெல்லை மாவட்டம், தற்போது மீண்டும் அதே பிரச்சனையில் சிக்கியிருக்கிறது. ஆனால் இம்முறை இத்தகைய சாதிய தாக்குதலில் ஈடுபட்டிருப்பது 18 வயது கூட நிரம்பாத மாணவர்கள். இதில் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சமுதாய மாணவனும் 11 ம் வகுப்பு படிக்கும் 18 வயது நிரம்பாதவர்தான்.
ஈடிவி பாரத்திடம் பாதிக்கப்பட்ட மாணவனின் உறவினர்கள் பகிர்ந்து கொண்ட தகவலின்படி, ஆகஸ்ட் 09ம் தேதி இரவு 10 மணியளவில் மாணவர் சின்னத்துரை தனது தாயார் மற்றும் தங்கையுடன் சேர்ந்து இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது 6 பேர் தட தடவென வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். ஆபாச வார்த்தைகளால் திட்டியவாறே அரிவாள்களால் மாணவனை சரமாரியாக வெட்டியுள்ளனர்.
தடுக்கச் சென்ற மாணவனின் தாயார் அம்பிகாவதியை காலால் எட்டி எதைத்துள்ளனர். கண்முன்னே அண்ணன் மீது கொலை வெறித் தாக்குதல் நடைபெறுவதை பாய்ந்து தடுக்கச் சென்ற தங்கைக்கும் கையில் வெட்டுக்காயம் விழுந்துள்ளது. அமைதியாக இரவு உணவு அருந்திக் கொண்டிருந்த குடும்பம் இந்த தாக்குதலால் நிலை குலைந்து போனது.
இதில் பலத்த காயமடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவனுக்கு இரண்டு கால்கள், கை, தலை உட்பட உடலில் காயம் படாத இடமே இல்லை என வேதனையுடன் கூறுகின்றனர் உறவினர்கள். திட்டமிட்டு உடல் முழுவதும் காயம் ஏற்படுத்தும் வகையில் 6 பேரும் சேர்ந்து வெட்டியுள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.
இது தொடர்பாக மருத்துவர்களிடம் விசாரித்த போது, முக்கிய நரம்புகள் உள்ளிட்டவற்றில் மாணவனுக்கு வெட்டுக்காயங்கள் இருப்பதாகவும் தற்போது அறுசை சிகிச்சை செய்துள்ளதாகவும் கூறினர். அவரது சகோதரிக்கும் கையில் நரம்புகள் துண்டாகியுள்ளன. இச்சம்பவத்தால் நெல்லை மாவட்டமே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ள நிலையில்,
போலீஸ் தரப்பில் ஈடிவி பாரத் குழு தகவல்களை கேட்டுப் பெற்றது, இதில் பள்ளியில் தொடங்கிய சிக்கல்களே வீடு தேடி வந்து வெட்டும் அளவுக்கு வளர்த்து விட்டுள்ளதாக கூறுகின்றனர். வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கிய போது அதிர்ச்சியூட்டும் மேலும் பல தகவல்கள் வெளி வந்துள்ளன.
பாதிக்கப்பட்ட மாணவன் சின்னத்துரை பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவன் ஆவார். இவர் வள்ளியூரில் உள்ள அரசுப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் பயிலும் பகுதியைச் சேர்ந்த மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள், சின்னத்துரையிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளனர். சின்னத்துரை படிப்பிலும் திறமைசாலி எனும் போதும் அதிக எண்ணிக்கையில் உள்ள மற்ற மாணவர்களின் கிண்டல் கேலிக்கு அஞ்சியுள்ளார்.
வகுப்பறையில் வைத்து மாணவனை அழைத்து கடைக்குச் சென்று வா என்று உத்தரவிட்டுள்ளனர். அவர்களுக்கு பயந்து மாணவனும் அவர்களிடம் பணிந்து நடந்துள்ளார். அதேபோல் தினமும் பள்ளி சென்று வரும்போது பேருந்தில் வைத்தும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக சக மாணவர்கள் அனைவரும் கேலி செய்யும் அளவுக்கு மாணவர்கள் அவமானப்படுத்தியுள்ளனர்.
ஒரு கட்டத்தில் மன வேதனை அடைந்த மாணவன், ’என்னால் இனிமேல் அந்த பள்ளிக்குச் செல்ல முடியாது, வேறு பள்ளிக்கு மாற்றுங்கள்’ என்று தனது தாய் அம்பிகாவதியிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அம்பிகாவதி, நேராக பள்ளி நிர்வாகத்திடம் சென்று முறையிட்டுள்ளார். எனவே பள்ளி நிர்வாகத்தினர், சம்பந்தப்பட்ட மாணவர்களை கண்டித்துள்ளனர். எனவே ஆத்திரம் அடைந்த மாணவர்கள், கூட்டாக சேர்ந்து சம்பவத்தன்று மாணவனின் வீட்டுக்குள் புகுந்து, அவரை கொலை வெறியோடு தாக்கியுள்ளனர் என்கின்றனர் போலீசார்.
பள்ளி மாணவர்களிடையே மீண்டும் தலை தூக்கிய சாதி மோதல் இச்சம்பவம் தற்போது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டு இதே நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே பள்ளக்கால் புதுக்குடி என்ற கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவன் சாதி பிரச்னையால் சக மாணவர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.
அதன் தொடர்ச்சியாக தற்போது நேர்ந்த இச்சம்பவம் தமிழ்நாடு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் இச்சம்பம் தொடர்பாக நாங்குநேரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மாணவனை தாக்கிய ஆறு பேரை கைது செய்துள்ளனர். இதற்கிடையில் மாணவனுக்கு நடைபெற்ற சம்பவத்தை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவனின் உறவினர் கிருஷ்ணன் என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இது குறித்து நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசனை ஈடிவி பாரத் சார்பில் பலமுறை தொடர்பு கொண்டோம். ஆனால் அவரது உதவியாளர் தான் நமக்கு பதில் அளித்தார். கேட்கும் போதெல்லாம் எஸ்பி மீட்டிங்கில் இருப்பதாக தெரிவித்தார். இது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனை, ஈடிவி பாரத் சார்பில் பிரத்தியேகமாக தொடர்பு கொண்டோம். அவர் நம்மிடம் கூறுகையில், “இது போன்று சாதி பிரச்னைகள் இருக்கும் பள்ளிகளை கண்டறிந்து வருகிறோம். முதல் கட்டமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் சம்பந்தப்பட்ட பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அதேபோல் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடத்தவும் உத்தரவிட்டுள்ளோம்.
அதே சமயம் சில இடங்களில் பெற்றோர்களே மாணவர்களுக்கு சாதி சார்ந்த விஷயங்களை சொல்லிக் கொடுப்பது வேதனையாக உள்ளது. எனவே இந்த மாணவர்களிடையே சாதி மோதலை தடுப்பது சற்று சவாலாக உள்ளது. முன்பெல்லாம் மாணவர்கள் பிரச்னை செய்தால் பெற்றோரிடம் தெரிவிப்போம். ஆனால், தற்போது பெற்றோர்களே மாணவர்களுக்கு சாதியை சொல்லிக் கொடுக்கின்றனர். தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். சாதி பிரச்னை சார்ந்த பதட்டமான கிராமங்களை கண்டறிந்து அங்கு தாசில்தார் மற்றும் காவல் துறை இணைந்து குழுவாக விழிப்புணர்வு நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம்” என்றார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய் அம்பிகாவதியை தொடர்பு கொண்டபோது அவர் மிகுந்த அச்சத்தில் இருந்தார். எனவே அவர் நம்மிடம் பேச விரும்பவில்லை. பாதிக்கப்பட்ட சிறுவன் மற்றும் அவரது சகோதரியும் சிகிச்சையில் இருப்பதால் அவர்களாலும் பேச முடியவில்லை. இது குறித்து மாணவனின் உறவினர்களிடம் கேட்டபோது, “பள்ளியில் நன்றாக படிப்பான், அவன் படித்து பெரிய ஆளாக வரவேண்டும் என தாய் அம்பிகாவதி விரும்பினார். அவனின் தந்தை தற்போது அவர்களோடு இல்லை. எனவே தனது மகனை நன்றாக படிக்க வைத்து அவனது எதிர்காலத்தை சிறப்பாக அமைக்க வேண்டும் என அம்பிகாவதி பெரிதும் ஆசைப்பட்டார். ஆனால் சாதி வெறிபிடித்த சக மாணவர்கள் இதுபோன்று கொடூரமாக நடந்து கொண்டது அவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது” என தெரிவித்தனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அரசு சமூக நீதியை நோக்கி செல்கிறது. பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு அறிவு கூர்மை தீட்டுவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மாணவர்களை கூர்நோக்கு இல்லங்களுக்கு அனுப்புவதற்கு அரசு விரும்பவில்லை எனவும், பாதிக்கப்பட்ட மாணவர் சின்னதுரையின் கல்லூரி படிப்பிற்கான முழு செலவையும் அண்ணனாக தான் ஏற்றுக் கொள்கிறேன் என்றும் வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
சாதிகளை ஒழிக்க வேண்டும் என்று தொடர்ந்து பலர் குரல் கொடுத்து வருகின்றனர். டிஜிட்டல் இந்தியா என்று மார்க்கெட்டிக் கொள்ளும் இந்த நவீன காலத்திலும் சாதி பிரச்னையால் பள்ளி மாணவர்கள் கொலை செய்யும் அளவுக்கு பாதிக்கப்படும் சம்பவம் கல்வியாளர்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி பைக் மீது மோதிய விபத்தில் 4 பேர் பலி: முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு!