திருநெல்வேலி:மாநகராட்சி மேயர் தேர்தல் இன்று (மார்ச் 04) மாநகராட்சி ராஜாஜி மஹாலில் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பி.எம். சரவணன் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். திருநெல்வேலி மாநகராட்சி பொருத்தவரை மொத்தம் 55 வார்டுகளில் திமுக கூட்டணி 51 இடங்களில் வெற்றி பெற்றது. அதே சமயம் சுயேட்சை வேட்பாளர் ஒருவரும் திமுகவில் இணைந்ததால் நெல்லை மாநகராட்சியில் திமுகவின் பலம் 51ஆக உயர்ந்தது.
அதிமுக நான்கு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. எனவே இன்று நடைபெற்ற தேர்தலில் திமுக தலைமை அறிவித்த மேயர் வேட்பாளர பி.எம். சரவணன் மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரனிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து வேறு எந்த உறுப்பினரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து பி.எம். சரவணன் போட்டியின்றி நெல்லை மாநகராட்சி மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஆணையர் விஷ்ணு சந்திரன் அறிவித்தார்.
சரவணன் மாநகராட்சியின் 16ஆவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். மேலும், நெல்லை மாநகராட்சியின் ஆறாவது மேயராக பி.எம். சரவணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து பி.எம். சரவணன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, “மேயராக தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கு வாக்களித்த அனைத்து மாமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
நெல்லை மாநகராட்சிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் சிறப்பான முறையில் செய்து கொடுப்பேன். குறிப்பாக சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுப்பேன்” என்றார்.