திருநெல்வேலி: பாளையங்கோட்டை ஐகிரவுண்டு பகுதியில் அமைந்துள்ள திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகளிடம் மதப்பிரச்சாரம் செய்ய தடை விதித்து பல ஆண்டுகளாக அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
அதில், இது மதச்சார்பற்ற மருத்துவமனை, இங்கு மத போதனைகள் தடைசெய்யப்பட்டுள்ளது. மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மதப் பிரச்சாரம் செய்பவர்கள் காவல்துறை வசம் ஒப்படைக்கப்படுவார்கள், இப்படிக்கு முதல்வர் என்று வாசகம் எழுதப்பட்டிருக்கும்.
பதாகையால் வெடித்த சர்ச்சை
இந்த அறிவிப்பு பலகையில் பொறிக்கப்பட்டிருந்த வார்த்தைகளால், சமூக வலைதளங்களில் பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. அதாவது இப்பலகை தற்போது தான் வைக்கப்பட்டுள்ளது என கிறிஸ்தவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் விவாதித்துள்ளனர்.
மேலும், வழக்கறிஞர் சரவணன் டி பிரட்ரிக் என்பவர் தனது யூடியூப் பக்கத்தில் இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இதே மருத்துவமனையில் இந்து கோயில் அமைந்துள்ளது. அதை உங்களால் எடுக்க முடியுமா. எனவே உடனடியாக இந்த பலகையை அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவிச்சந்திரனை தொடர்பு கொண்டு அந்த வாசகம் புதிதாக எழுதப்பட்டதா என விசாரித்துள்ளார். அதற்கு விளக்கம் அளித்த முதல்வர் ரவிச்சந்திரன், அந்த வாசகம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதுதான், வேண்டுமென்றால் எடுத்துவிடலாம் என்று தெரிவித்துள்ளார்.