திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தற்போது வரை மாவட்டம் முழுவதும் 3,773 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, நகர்ப் பகுதியில் நாள்தோறும் 80க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் நேரில் புகார் அளிக்க வரவேண்டாம் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும் பொதுமக்கள் புகார் அளிக்க நேரில் வர வேண்டாம் என காவல் துணை ஆணையர் சரவணன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், "நெல்லை மாநகரில் கரோனோ தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசியத் தேவையின்றி, மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வருவதைத் தவிர்க்கும் வகையில், தங்கள் புகார் மனுக்களை 7449100100 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பலாம்.
மேலும் தங்கள் புகார்களை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறை 9498181200, 0462-2562651 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மக்கள் நலன் கருதி, ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த முறையினை பொதுமக்கள் பயன்படுத்தி கரோனா நோயிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.