தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தண்ணீரில் தத்தளிக்கும் நெல்லை: மூழ்கியது ஆட்சியர் அலுவலகம்.. நெல்லையில் நிலைமை கைமீறியதா? - திருநெல்வேலி நிலவரம்

Nellai rain: திருநெல்வேலியில் வரலாறு காணாத கனமழை பெய்து வரும் நிலையில் சாலைகள், குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கி, சாலைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

வெள்ளத்தில் தத்தளுக்கும் நெல்லை மாநகரம்!
வெள்ளத்தில் தத்தளுக்கும் நெல்லை மாநகரம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 18, 2023, 7:11 PM IST

Updated : Dec 18, 2023, 8:03 PM IST

தண்ணீரில் தத்தளிக்கும் நெல்லை: மூழ்கியது ஆட்சியர் அலுவலகம்.. நெல்லையில் நிலைமை கைமீறியதா?

திருநெல்வேலி:அரபிக் கடலில் உருவான காற்று வளிமண்டல கீழெடுக்க சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்களில் டிசம்பர் 16ம் தேதி முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கைப் படி நெல்லை மாவட்டத்தில் கடந்த 16ம் தேதி நள்ளிரவு முதல் தொடர்ந்து 35 மணி நேரம் கனமழை பெய்து வருகிறது. இடைவிடாமல் பெய்த கனமழை காரணமாக நெல்லை மாவட்டம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்து மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் மழை அளவை பொருத்தவரை அதிகபட்சமாக மூலைக்கரைப்பட்டியில் கடந்த 40 மணி நேரத்தில் சுமார் 70 சென்டிமீட்டர் வரை மழைப் பதிவாகியுள்ளது. இதைப் போல் பாளையங்கோட்டை, களக்காடு, அம்பாசமுத்திரம், நெல்லை மாநகரம் நம்பியார் அணை பகுதி, கொடுமுடி ஆறு போன்ற மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மிகக் கனமழை பதிவாகியுள்ளது.

குறிப்பாக, நெல்லை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இடைவிடாமல் கொட்டித் தீர்க்கும் கனமழையால் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு போன்ற முக்கிய அணைகளுக்கு நீர் வரத்து ஒரே நாளில் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஏற்கனவே அணைகள் நிரம்பும் தருவாயில் இருந்த நிலையில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கு வரும் தண்ணீர் அதே அளவு உபரிநீராகத் திறந்து விடப்பட்டது.

தாமிரபரணி தண்ணீர் திறப்பு:அதைத் தொடர்ந்து, நேற்று மாலை வரை தாமிரபரணி ஆற்றில் 40000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை தாமிரபரணி ஆற்றில் சுமார் ஒரு லட்சம் கன அடி வரை தண்ணீர் சென்றது. இதனால் ஆற்றின் இரு கரைகளையும் மூழ்கி தாமிரபரணி ஆற்றுக் கரையோர பகுதிகளில் கடும் வெள்ளம் சேதம் ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாநகர பகுதிகளில் அமைந்துள்ள தாமிரபரணி ஆற்றில் இதுவரை இல்லாத வகையில் கட்டுக்கடங்காத வெள்ள நீர் சென்றதால் வண்ணாரப்பேட்டை டவுன், பேட்டை, நெல்லை சந்திப்பு போன்ற பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

வெள்ளத்தால் சூழ்ந்த ரயில்,பேருந்து நிலையம்:குறிப்பாக நெல்லை சந்திப்பு பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ரயில் நிலையம் குளம் போல் காட்சியளித்தது. அதேபோல் ரயில் நிலையத்திற்குச் செல்லும் சாலையில் அனைத்தும் வெள்ள நீரில் மூழ்கி அங்குப் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நிலை சந்திப்பு பேருந்து நிலையத்தில் சுற்றிலும் சுமார் 6 அடி அளவிற்குத் தண்ணீர் தேங்கியதால் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் பலர் வெள்ளத்தில் சிக்கித் தவித்தனர்.

வெள்ளத்தில் தத்தளிக்கும் ஆட்சியர் அலுவலகம்:இதேபோல் மணி மூர்த்தீஸ்வரம், வண்ணாரப்பேட்டை, மேலப்பாளையம், பழைய பேட்டை, தச்சநல்லூர் போன்ற மாநகரின் பெரும்பாலான பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றிலிருந்து வெளியேறிய வெள்ள நீரால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெள்ளத்தில் சூழ்ந்ததுள்ளது. இதனால் கொக்காரத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக மேலப்பாளையம் செல்லும் சாலை மூடப்பட்டுள்ளது.

சாலைகள் துண்டிப்பு: மேலும், ஆட்சியர் அலுவலகத்தைச் சுற்றி தண்ணீர் தேங்கியதால் அங்குச் செயல்பட்டு வந்த கட்டுப்பாட்டு அறை மாநகராட்சி அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதைப் போல் நெல்லை- தென்காசி பிரதான போக்குவரத்து சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

  • மேலும், நெல்லை - நாகர்கோவில் N.H. துண்டிப்பு
  • நெல்லை - திருச்செந்தூர் ரோடு - துண்டிப்பு
  • நெல்லை - தூத்துக்குடி ரோடு துண்டிப்பு
  • நெல்லை - கோவில்பட்டி ரோடு தச்சநல்லூரில் துண்டிப்பு
  • நெல்லை புது பஸ்டாண்ட் - அம்பாசமுத்திரம் ரோடு முன்னீர்பள்ளம் முதல் பல இடங்களில் துண்டிப்பு
  • பேட்டை - பழைய பேட்டை லிங் ரோடு துண்டிப்பு
  • நெல்லை டவுண் - சேரன்மகாதேவி ரோடு துண்டிப்பு
  • முக்கூடல் - கடையம் ரோடு துண்டிப்பு
  • இடைகால் - ஆலங்குளம் ரோடு துண்டிக்கப்பட்டுள்ளது.

மீட்புப் பணிகள் தீவிரம்: நெல்லை மாவட்டம் முழுவதும் 560 பேருந்துகள் தினமும் இயக்கப்படும் நிலையில் இன்று 300க்கும் குறைவான பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. அரசு சார்பில் மீட்பு பணிக்காக பத்து பேரிடர் மீட்புக் குழுக்கள் நெல்லை விரைந்தன. இதில் 4 குழுக்கள் மாநகர பகுதிகளிலும் 6 குழுவினர் புறநகர்ப் பகுதிகளிலும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.

பேரிடர் மீட்பு முகாம்: சூலூர் விமானப்படைத் தளத்திலிருந்து இரண்டு ஹெலிகாப்டர்கள் நெல்லை வரவழைக்கப்பட்டு மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட முழுவதும் 245 பேரிடர் மீட்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை நிலவரப்படி சுமார் 5 ஆயிரம் மக்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது.

ரயில் சேவைகள் முடக்கம்:மாவட்டம் முழுவதும் ரயில் தண்டவாளங்களில் சேதம் ஏற்பட்டிருப்பதால் நெல்லையில் ரயில் சேவை முற்றிலுமாக முடங்கியுள்ளது. எனவே வட மாவட்டங்களிலிருந்து நெல்லை வழியாக இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், மலை வெள்ளத்தால் மாவட்டம் முழுவதும் இதுவரை மூன்று பேர் பலியாகி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வீடுகளை விட்டு வெளியேறும் மக்கள்: மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் வெள்ளத்தில் சூழ்ந்துள்ளதால் பலர் வீடுகளை காலி செய்து வெளியேறி வருகின்றனர். மேலும், வெள்ள மீட்புப் பணியில் ஈடுபடுவதற்காகக் கூடுதல் அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இ

இந்நிலையில், தமிழக விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிற்பகல் நெல்லை மாவட்டத்திற்கு வருகை தந்து பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் ஆய்வு செய்தார். மேலும் அமைச்சர்கள் தன் தங்கம் தென்னரசு, கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன் ஆகியோரும் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் முகாமிட்டு வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டு வருகின்றனர்.

மேலும், அடுத்த 24 மணி நேரத்திற்கு நெல்லை மாவட்டத்தில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பதால் தொடர்ந்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை படி இன்று இரவு மழை நீடித்தால் மீண்டும் அணைகளிலிருந்து கூடுதல் அளவு தண்ணீர் திறக்கப்படும் சூழல் ஏற்படும், இதனால் தாமிரபரணி கரையோர பகுதியில் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:South TN Rain Live Update:எந்தெந்த பகுதிக்கு 'ரெட் அலர்ட்'..தென்மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கும் கனமழை..நிலவரம் என்ன?

Last Updated : Dec 18, 2023, 8:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details