திருநெல்வேலிமாநகராட்சியில் 'வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு' உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று (ஜூலை 27) மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. திருநெல்வேலிமாநகராட்சியில் உள்ள 55 மாமன்ற உறுப்பினர்களும் இதற்கான தேர்தலில் கலந்து கொண்டனர். இதில் 44 பேர் திமுக உறுப்பினர்கள், 7 பேர் திமுக கூட்டணி உறுப்பினர்கள். மேலும், அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் 4 பேர் என மொத்தம் 55 பேர் தேர்தலில் வாக்களித்தனர்.
வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழுவின் 9 உறுப்பினர்களுக்கான இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான 9 திமுக மாமன்ற உறுப்பினர்களை, திமுக திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளர் டிபிஎம் மைதீன்கான் அறிவித்திருந்தார். திருநெல்வேலி மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடைபெறும் ராஜாஜி அரங்கில் இன்று காலை 9.30 மணியிலிருந்து 10.30 மணி வரை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து 10.30 மணிக்கு மேல் மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இன்றைய நாள் நடைபெறும் தேர்தலில் திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் டிபிஎம் மைதீன்கான் அறிவித்திருந்த 9 பேரில் 3 பேரை மாற்றி அறிவித்த நிலையில், அந்த மூன்று திமுக உறுப்பினர்களுக்கு போட்டியாக ஏற்கனவே மாமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டு தேர்ந்தெடுத்த 3 திமுக மாமன்ற உறுப்பினர்கள் போட்டியில் களமிறங்கியதால் மொத்தம் 12 பேர் இந்த உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டனர். இதனால், 10:30 மணிக்கு முடிய வேண்டிய தேர்தல் மதியம் 12 மணிக்கு தான் முடிவுக்கு வந்தது.
அதன்படி இன்று நடந்து முடிந்த வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர் தேர்தலில் திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் டிபிஎம் மைதீன்கான், அறிவித்த மூன்று பேர் பாலம்மாள், ஆமீனாபீவி, ராஜேஸ்வரி ஆகிய மூன்று திமுக உறுப்பினர்களும் தோல்வியுற்றனர். இதற்கு பதிலாக போட்டியிட்ட திமுக உறுப்பினர்கள் ரவீந்தர், பொன் மாணிக்கம், ஜெகநாதன் ஆகிய 3 திமுக உறுப்பினர்களும் வெற்றி பெற்றனர்.
திமுக பொறுப்பாளர்கொலைமிரட்டல்?:இதனைத்தொடர்ந்து மாமன்ற சாதாரணக் கூட்டம் தொடங்கியது. அப்போது முதலில் பேசிய திருநெல்வேலி மண்டல சேர்மன் மகேஸ்வரி, “இன்று நடைபெற்ற வரிவிதிப்பு மேல்முறையீட்டு தேர்தல் தொடர்பாக நேற்று மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் டிபிஎம் மைதீன்கான், மண்டல சேர்மன்களை அழைத்து வர சொல்லிப் பேசி இருந்தார். அப்போது எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். அப்போது அந்த இடத்தில் மேயர் மற்றும் துணை மேயர் இதற்கு ஒன்றும் பேசாமல் இருந்தனர். 55 உறுப்பினர்கள் முதலில் யாரை கொல்ல போகிறார்கள்” என ஆவேசமாக பேசினார்.